அன்னை தெரசா…
தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனது குழுவினருடன் வீதி,வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார்.
அப்படி ஒருமுறை சென்றபோது, ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார்.
அவர் தெரசாவை கண்டும் காணாமலும் இருந்தார்.
தெரசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார்.
கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை, தெரசாவின் கையில் துப்பினார்.
சற்றும் பொறுமையை இலக்காத தெரசா, இது நீங்கள், எனக்கு கொடுத்தது.
பசியில் வாடும் குழந்தைகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள் எனக் கூறியதும்,
அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவிச் செய்தார்.
ஆகஸ்ட் 26 – 1910 –
'பிறர் அன்பின் பணியாளர் சபை' நிறுவனரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான
அன்னை தெரசா
115 – வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 26. -
இளமைப் பருவம்!
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில்
1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார்.
இவரது இயற்பெயர்
ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா.
தந்தை நிக்கல் நிகோலா, தாய் பொயாஜியூ திரானி பெர்னாயின் மூன்றாவது மகளாக பிறந்தவரின் சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ்.
தெரசாவின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
இதன் பிறகு இவரது தாயால், நற்குணங்கள் கூறி வளர்க்கப்பட்டார்.
குறிப்பாக ஐந்து வயதிலேயே பள்ளி பாடங்களை எப்போது கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவிற்கு படிப்பில் திறமையானவராக இருந்தார். தவிர தன் நகைச்சுவை உணர்வால், சிறுவயதிலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரிக்கும் திறனும் பெற்றிருந்தார்.
ஏழை எளியவர்களுக்கு,
உடல் ஊனமுற்றோருக்கு,
பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்துவந்ததோடு,
தேவாலயங்களைப் பெருக்கி சுத்தம் செய்தல்,
மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுதல்,
மருத்து வைத்து விடுதல்
ஆகிய பணிகளைச் செய்ததும், அனைவரிடமும் இனிமையான வார்த்தைகளையே பேசுவார்.
இந்திய வருகையும்,
'தெரசா' பெயர் மாற்றமும்!
சிறுவயதில் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்த தெரசா,
தனது 18 வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்தார்.
அதன்படி தாய், சகோதரி மற்றும் ராணுவத்தில் பணியாற்றி வந்த அண்ணனிடமும் சம்மதம் பெற்றார்.
வீட்டிலிருந்து விடுபட்டு
'Sodality of children of Mary'
என்ற அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறைப் பணியாளராக தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒருமுறை இந்தியாவின் மேற்கு வங்கம் பயணம் முடித்து திரும்பிய அச்சகோதரிகளின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் ஏழ்மை நிலையினரை பற்றி தெரிந்துகொண்டார்.
பின்னர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக, துறவறம் செல்ல முடிவெடுத்தார்.
அதன்படி
1928-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி
ராத் ஃபர்ன்ஹாம் (Rathfarnham)
எனப்படும் அயர்லாந்தின்
சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ
என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார். ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.
அப்போதுதான்
'ஒரே தேவை, சேவை'.
அதுவும்
குழந்தைகள்,
பெரியவர்கள்,
ஏழைகள்,
நோயாளிகள்
என பாரபட்சம் இன்றி எல்லோருக்கும்
உதவிகளைச் செய்ய வேண்டும்
என நினைத்தார்.
பிறகு 1929-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார்.
சட்ட விதிகளின்படி புதிதாக வந்து அங்கு சேருபவர், பெயரை மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
பிரான்ஸ் நாட்டின் சகோதரி 'தெரசா மார்டின்' ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவையாற்றவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்ள நினைத்தார்.
அவரது நினைவாக தனது பெயரை 'தெரசா' என மாற்றிக் கொண்டார்.
சேவையில் ஈடுபாடு!
கொல்கத்தாவில் தங்கியிருந்த தெரசா,
அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள்,
தொழிலாளர்களின் நிலை,
வேலையில்லா திண்டாட்டம்,
பசியுடன் திரிந்த குழந்தைகள்,
சுகாதரமற்ற குடியிருப்புகள்,
வியாதியுடன் கூடிய மக்களைக் கண்டு வருத்தம் கொண்டார்.
சில காலங்களிலேயே
'இந்தியாதான் இனி என் தாய்நாடு'
என முடிவெடுத்தார்.
இந்தி மொழியும் கற்றுக் கொண்டார்.
மீண்டும் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டார்.
சமூக சேவை
அங்கு கல்வியுடன், சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று.
அப்படி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதைத் தவிர, குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டினார்.
ஏழை மக்களையும் தேடிச் சென்று சேவைகள் செய்தார்.
பள்ளி முதல்வர்
ஆசிரியையாக இருந்த தெராசா, பின்நாளில் பள்ளி முதல்வரானார்.
பதினேழு ஆண்டுகள் கல்வி பணியில் இருந்து, ஏராளமான நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொண்டார்.
தெரசாவுடன் லொரேட்டாவின் முன்னாள் மாணவியர்கள் பத்து பேர் கொண்ட முதல்கட்ட சேவைக்குழு உருவாகி,
மக்களுக்காக பணிசெய்ய தொடங்கியது.
1950-ம் ஆண்டு
'பிறர் அன்பின் பணியாளர்'
என்ற சபையைத் துவங்கி,
பசியால் வாடும்,
வீடின்றி தவிக்கும்,
மாற்றுத்திறனாளிகள்,
சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தார்.
தொழு நோய் மருத்துவமனை
தொழு நோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கி, அதே ஆண்டு
'காந்தி பிரேம் நிவாஸ்'
பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.
பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தொழுநோய், காசநோய், எஸ்.ஐ.வி பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும்,
அவர்களை மற்றவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.
சிறை கைதிகளுக்கும்,
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் போதிய உதவிகளுடன்,
ஆலோசனை மையங்கள் மூலமாக உதவிகள் செய்து வந்தார்.
உடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்துவிடுவதும்,
உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில்
சீல் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்து, மருத்துவம் செய்து பராமரித்தார்.
இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளுக்கும்
'பிறர் அன்பின் பணியாளர்' சபையினை சேவைகளை விரிவுபடுத்தினார்.
அதன்படி 1965-ம் ஆண்டு வெனிசூலாவிலும், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் சேவை மையங்களை நிறுவினார்.
சுதந்திரப் போராட்டங்கள், போர், உள்நாட்டு கலவரங்கள்
என எந்த நாட்டில் மக்கள் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்
எனத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் சென்று உதவிகள் செய்துவந்தார்.
சோதனைகளும் சாதனைகளும்!
தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு,
தனது குழுவினருடன் வீதி,வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார்.
அப்படி ஒருமுறை சென்றபோது,
ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார்.
அவர் தெரசாவை கண்டும் காணாமலும் இருந்தார். தெரசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார். கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை,
தெரசாவின் கையில் துப்பினார்.
சற்றும் பொறுமையை இழக்காத தெரசா,
இது நீங்கள், எனக்கு கொடுத்தது.
பசியில் வாடும் குழந்தைகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள் எனக் கூறியதும்,
அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவிச் செய்தார்.
இறப்பு!
1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.
அவர் மரணமடைந்த போது, அவரது
'பிறர் அன்பின் பணியாளர் சபை'
123 நாடுகளில் 610 சேவை மையங்களை இயங்கி வந்ததுடன்,
4 ஆயிரத்துக்கும் அதிகமான அருட்சகோதரிகளையும்,
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டும் இருந்தது.
பெற்ற விருதுகள்!
1962-ல் பத்மஸ்ரீ விருது.
1972 -ல் பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது.
1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு.
1980- இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது.
இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள்.
2003-ல் 'அருளாளர்' பட்டம் பெற்றார்.
-------------------------------------------------------------.