கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் விழா
மற்றும்
25-ம் ஆண்டு வெள்ளி விழா -
தேர் பவனி –
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஓசூர். செப்டம்பர். 9. -
ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா மற்றும் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 25-ம் ஆண்டு வெள்ளி விழா
ஆகிய இரு பெரும் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலியுடன் பெரிய தேர் பவனி நடைபெற்றது.
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதியன்று புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா தேர் பவனியுடன் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
தருமபுரி மறை மாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
நடப்பாண்டில் இந்த ஆலயத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவுடன் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரோக்கிய அன்னையின் இருபெருவிழாவும் தொடங்கியது.
இந்த தொடக்க விழாவில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்து மாதா கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
அன்று முதல் தினமும் நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரை, தியானம் மற்றும் ஆலயத்தைச் சுற்றி
சிறிய தேர் பவனி
நடைபெற்று வந்தது.
பெரிய தேர்த்திருவிழா
ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள்
மற்றும்
25ம் ஆண்டு வெள்ளி விழா தினமான
2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி அன்று
பெரிய தேர்த்திருவிழா நடைபெற்றது.
ஆடம்பர திருவிழா திருப்பலி
இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் காலை 9 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
பெங்களுர், கார் மேலரம், கிளாரட் பவன்
அருட்பணி M. மைக்கேல் மரியதாஸ்
தலைமையில் திருவிழா திருப்பலி, மற்றும் சிறப்பு மறையுரையும் நடைபெற்றது.
பிறந்த நாள் கேக்
அதைத்தொடர்ந்து ஆலயத்தில் வாழ்த்துப்பாடலுடன்
புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள்
கேக் வெட்டி, குழந்தைகளுக்கும், இறைமக்களுக்கும் வழங்கப்பட்டது.
பெரிய தேர் பவனி
மாலை 6.00 மணிக்கு திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய அன்னையின் பெரிய தேர் பவனி நடைபெற்றது.
இதில் ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி எஸ்.பெரியநாயகம்
தலைமை வகித்து திருப்பலி மற்றும் தேர் மந்திரிப்பு செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார்.
மேளதாளங்கள் முழங்க,
அழகிய கப்பல் வடிவில் வடிவமைக்கப்பட்டு ,
வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில்
புனித ஆரோக்கிய அன்னை
எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள் பாலித்தார்.
இந்த தேர் பவனி...
மத்திகிரி நேதாஜிநகர் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய மத்திகிரி சாலை வழியாக பயணித்து இறுதியில் பழைய மத்திகிரி குதிரைப் பாளையத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்த தேர் பவனியில்
புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை
அருட்பணி. கிறிஸ்டோபர்,
அருட்சகோதரிகள், பங்கு குழுவினர், பாடல் குழுவினர், பக்த சபைகள்,
மற்றும் ஆயிரக்கணக்கான இறை மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
--------------------------------------------.