‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம்.
தண்ணீர் வீணாவதை தடுப்போம்
மார்ச் – 22 - உலக தண்ணீர் தினம்
World Water Day
2025 கருப்பொருள் –
"பனிப்பாறை பாதுகாப்பு"
"Glacier Preservation"
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 22. –
மார்ச் 22, 2025 அன்று,
உலக நீர் தினம்
"பனிப்பாறை பாதுகாப்பு"
என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும், இது உயிர்கள் மற்றும் நீர் சுழற்சியை நிலைநிறுத்துவதில் பனிப்பாறைகளின் முக்கிய பங்கையும், காலநிலை மாற்றத்தையும் இந்த முக்கியமான நன்னீர் ஆதாரங்களில் அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றின என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில்
உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது.
அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது.
1993-ம் ஆண்டு முதல், மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது.
2040-ம் ஆண்டில்,
உலகில் 4-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையில் அவதிப்படும்.
குறிப்பாக, இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில், 60 கோடி மக்களுக்கு கடும் தண்ணீர்ப் பற்றக்குறை பிரச்சனை ஏற்படும்
என்று யுனிசெஃப் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் 36 நாடுகளில், தீவிரமான தண்ணீர்ப் பிரச்னை நிலவிவருகிறது. முக்கியமாக, இந்தியக் கிராமப்புறங்களில் வசிக்கும் 6 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு
சந்திரன்,
செவ்வாய்,
கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
அபாயக் கட்டத்தை நெருங்குகிறது நிலத்தடி நீர்
நிலத்தடி நீர் பற்றி சமீப காலங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
மத்திய நீர் வளத்துக்கான
நிலைக்குழுவின் 23-வது (2017-18)
அறிக்கை, 2030-ல்
டெல்லி,
பெங்களூரு,
ஹைதராபாத்,
சென்னை
போன்ற 21 நகரங்களில் நிலத்தடி நீர் குறைந்து போய்விடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
அதிகரிக்கும் நீர்த் தேவை
நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டும் பெரிய மாநிலங்களில் ஒன்றாக
தமிழகம் திகழ்கிறது.
கணக்கிடப்பட்டுள்ள 38 தமிழக மாவட்டங்களில்,
21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80%-த்துக்கும் மேலாகச் சுரண்டப்பட்டுவிட்டதாகப்
புள்ளிவிவரம் கூறுகிறது.
இதற்கு மேல், இம்மாவட்டங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது பெரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.
பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகு, வீரிய ரக விதைகள், ரசாயன உரங்களோடு நிலையான நீர்ப்பாசனமும் தேவைப்பட்டது.
ஆழ்குழாய்க் கிணறு
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட
அபரிமித வளர்ச்சியால்,
1990-க்குப் பிறகு நிலத்தடி
நீரின் உபயோகம் பன்மடங்காக அதிகரித்தது.
பயிர்களுக்கான ஆதார விலை நிர்ணயத்தில் நீர்ப் பயன்பாட்டைக் கணக்கில் எடுக்காத காரணத்தால், அதிக நீர் தேவைப்படுகின்ற நெல், கோதுமை, கரும்பு, வாழை போன்ற பயிர்களின் சாகுபடி அதிகரித்தது.
வற்றும் கிணறுகள்
2017-ல் வெளியிடப்பட்டுள்ள குறுநீர்ப் பாசனக் கணக்கெடுப்பு, 2006-07-க்கும் 2013-14-க்கும் இடைப்பட்ட காலத்தில் 4.14 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் இந்தியாவில் பயன்படுத்த முடியாமல் போய்விட்டதாகக் கூறுகிறது.
தமிழக அரசால்
வெளியிடப்பட்டுள்ள
புள்ளிவிவரப்படி,
2000-01ல் மொத்தமாக 18.33 லட்சம் கிணறுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன,
அவற்றில் 1.59 லட்சம் கிணறுகள் உபயோகத்துக்குப் பயன்படாமல் போய்விட்டன.
அதிக அளவு நிலத்தடி நீரை இவை உறிஞ்சுவதால், குறைந்த ஆழமுடைய கிணறுகளில் நீர் வற்றி அவை பயனற்றுப் போய்விட்டன.
நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துவருவதால் விவசாயிகளால், பழைய ஆழ்துளைக் கிணறுகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
இதனால் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்?
மொத்த இந்திய விவசாய உற்பத்தியில், நிலத்தடி நீரின் பங்கு மட்டும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்காக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலத்தடி நீர்ப் பாசனப் பரப்பு அதிகம் என்பதால், இதன் பாதிப்பு சதவீதம் சற்று அதிகமாகவே இருக்கும்.
குடிநீர் மற்றும் தொழில் துறைப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருப்பதால், தொடர்ந்து அளவுக்கு அதிகமாகச் சுரண்டுவதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
ஒவ்வொரு துளி மழை நீரையும் வீணடிக்காமல் வாய்க்கால்கள் மூலமாகக் ஏரி,குளங்களில் சேமித்து, நிலத்தடி நீர்ச் சுரப்பை அதிகரிக்க வேண்டும்.
மழை நீர்ச் சேமிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் முறையாக அமல்படுத்த வேண்டும்.
பயிர்களின் நீர்ப் பயன்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் தற்போது பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது.
நீர்ச் சுரண்டலைத் தடுக்க,
குறைந்த நீர் தேவைப்படும்
பயிர்களுக்கு அதிகவிலை
அறிவிக்க வேண்டும்.
இந்தியாவில்
மொத்தமாகவுள்ள
6,584 வட்டங்களில்,
32% வட்டங்களில் நிலத்தடி
நீர்ச் சுரண்டல் அளவுக்கு அதிகமாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இது போன்ற பகுதிகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் நிலத்தடி நீர்த் தேவையைக் குறைக்க முடியும்.
விவசாயத்தில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் நீர்த் தேவையைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும்.
‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினத்தில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.
---------------------------------------------.