இந்தியச் சமூகக் கட்டமைப்பில் நிலவுகின்ற
சாதியத்தைத் தகர்த்திடவும்,
மூடத்தனங்களிலிருந்து மக்களை மீட்டிடவுமான
கொள்கை ஏந்தலோடு,
‘அந்தஷ்ரதா நிர் மூலம்”
என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் பல்வோறு போராட்டங்களை முன்னெடுத்தவர்
மகாராஷ்டிராவைச் சோர்ந்த
நரேந்திர தபோல்கர்.
ஆகஸ்ட் – 20 –
தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்
(National Scientific Temper Day)
மண்ணையும், மக்களையும் பெரிதும் நேசித்த
மருத்துவர் நரேந்திர தபோல்கர்
நினைவுதினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 20. -
அன்றைய தினம் எதிரே வந்த எல்லா வாகனங்களிலும் வாழைமரங்கள் விறைப்பாக நின்றன.
பிறந்த நாளன்று தங்கள் அன்புக்குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து அழகுபார்ப்பதைப் போல,
தங்கள் வாகனங்களையும் கழுவிச் சுத்தம் செய்து பொட்டிட்டு-பூவிட்டு அழகுபார்க்கத் தவறவில்லை. அப்போதுதான் தெரிந்து கொண்டேன் இன்று ஆயுதபூஜை என்று.
வாகனங்களைத் தங்கள் ஆயுதங்களாக எண்ணி,
மறவாமல் பூஜை செய்து கொண்டாடிய மனிதர்கள், அதனைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞரை மறந்து விட்டார்கள்.
கண்டுபிடித்த மேதையைக் கைகழுவி விட்டுவிட்டு,
அவன் கண்டுபிடித்த சாதனங்களைக் கழுவிப் பூஜை செய்வதால் என்ன பயன்?
ஆன்மிகத்தை தூக்கிப் பிடித்து அறிவியல் கண்ணோட்டத்தை மறந்ததன் விளைவு,
இன்று அறிவியல் சாதனங்களின் அற்புத மழையில் நனைந்து கொண்டே,
மூடநம்பிக்கை எனும் முட்புதரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று நாம் செய்தி ஏடுகளைப் புரட்டினால்,
‘குடுகுடுப்பைக்காரன் குறி சொல்லியதன் பேரில் குழந்தையை நரபலி கொடுத்த சென்னை வியாசர்பாடியைச் சோர்ந்த மகேஸ்வரி கைது.”
’பில்லி, சூன்யம் நீக்கித் தருவதாகக் கூறி ரூ.25இலட்சம் பணம், 65 பவுன் நகைககை மோசடி செய்த சாமியார் கைது”
என்பன போன்ற செய்திகள் நம் இதயத்தை முள்ளாய்க் குத்துகின்றன.
இவ்வாறான மூடநம்பிக்கைகளில் மூழ்கி,
மக்கள் துன்பத் தோனியில் மிதப்பதைக் கண்டு, அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த முனைந்த புரட்சியாளர்கள் பலர் மனிதநேயத்தோடு குரல் கொடுத்துப் போராடியிருக்கிறார்கள்.
இங்கர்சால்,
கோரா,
ஜோதிராவ் பூலே,
டாக்டர்அம்பேத்கர்,
தந்தை பெரியார்,
ஆபிரகாம், கோவூர்....
என புரட்சியாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நரேந்திர தபோல்கர்
அந்த வரிசையில் இந்தியச் சமூகக் கட்டமைப்பில் நிலவுகின்ற சாதியத்தைத் தகர்த்திடவும், மூடத்தனங்களிலிருந்து மக்களை மீட்டிடவுமான கொள்கை ஏந்தலோடு, ‘அந்தஷ்ரதா நிர் மூலம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் பல்வோறு போராட்டங்களை முன்னெடுத்தவர் மகாராஷ்டிராவைச் சோர்ந்த நரேந்திர தபோல்கர்.
நாம் பார்கிறோம், பெரும்பாலான மருத்துவர்கள் தாங்கள் வைத்திருக்கும் தனியார் மருந்துவமனைகளில் மருத்துவக் கருவிகளுக்கு இணையாகக் கடவுளர்களின் படங்களும். காட்சி தருகின்றன.
இது மிகவும் அபத்தமானது: அறிவியலுக்கு எதிரானது என்பதை, நோய்களுக்கு எதிரான அறிவியல் படித்த மருத்துவர்கள் கூட உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.
நரேந்திர தபோல்கரும் அடிப்படையில் ஒரு மருத்துவர்தான். ஆனால் சராசரியைப் போன்றவர் அல்லர்.
மண்ணையும், மக்களையும் பெரிதும் நேசித்த மருத்துவர் நரேந்திர தபோல்கர்,
மக்களைப் பீடித்த உடல் நோயைக் குணப்படுத்துவதோடு,
அவர்களின் மனதில் நிறைந்திருக்கும் மூடநம்பிக்கை என்னும் மனநோயையும் குணப்படுத்தும் சமூக மருத்துவராய்ப் பரிணமித்தார்.
பின்னர் சமூக மருத்துவத்தையே தனது முழுநேரப் பணியாக்கிக் கொண்டார்.
இந்து மதத்தில் நிலவும் மூடச்சடங்குகளையும், முட்டாள்தனமான நம்பிக்கைகளையும் கனத்த குரலால் மக்களிடையே விளக்கி,
மக்களைப் பகுத்தறிவுக் கரைசேர்க்கும் கலங்கரை விளக்காக விளங்கினார்.
மேலும் மக்களை நாசாகரப்படுத்தும் மூடநம்பிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதோடு,
மூடநம்பிக்கைக்கு எதிர்ப்புச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி,
உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தார்.
சனி சங்கனாப்பூர் கோவிலில்
பெண்கள் நுழைய இருந்த தடையை
தன் போராட்டத்தால் தகர்த்தெறிந்தார்.
இத்தகைய ஒப்பற்ற புரட்சியாளனை
கடந்த 20.08.2013 அன்று, புனே நகரில் சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது இந்து மதவெறி பிடித்த கும்பல்.
நரேந்திர தபோல்கரின் வீரச்சாவுக்குப் பிறகு,
13 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த அவரின் கோரிக்கையான மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்டிரா அரசு.
காலம் கடந்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் என்றாலும் கூட,
அது தபோல்கர் போன்ற போராளிகளின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே.
‘பொறுக்கிகள் போராளிகளைக் கொல்வதுண்டு. ஆனால் அவர்களின் இலட்சியங்களை ஒருநாளும் வெல்வதில்லை.” என்று சொல்வார்கள்.
இச்சொல்லாடலுக்கு ஏற்ப இந்து மதவெறியர்கள் போராளி தபோல்கரைக் கொன்றுவிட்டதன் மூலம் அவர் நெஞ்சில் சுமந்த இலட்சியங்களைப் புதைத்து விட முடியாது.
மாறாக பல்வேறு பரிமாணங்களாக அது நீட்சி அடையவே செய்யும்.
மூடநம்பிக்கை தோற்றுவாயின் ஆணிவேரைப் பற்றிப்படிக்க நாம் பல நுறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.
தொடக்க காலத்தில் நாடோடியாக வாழ்ந்த மனிதக்கூட்டம்
கட்டற்றோடிய காட்டாற்று வெள்ளத்தையும்,
கடலாய் எழுந்து வந்த கருமேகத்தையும்,
சுழன்று தாக்கிய சூறாவளியையும்,
கொட்டித்தீர்த்த மழையையும்,
வாட்டி வதைத்த வெயிலையும்,
பீறிட்டுக் கிளம்பிய மின்னல் கீற்றையும்
கண்டு அஞ்சி நடுங்கியது.
இத்தகைய இயற்கை நிகழ்வுகள் நம்மை மிஞ்சிய ஏதோ சக்தியின்-தேவதையின்- தெய்வத்தின் ஏவுதலால் தான் நடக்கிறது என்றும்,
பற்பல விலங்குகளையும், மனிதர்களையும் பலியிட்டு இரத்தம் சிந்தச்செய்து வழிபடுவதன் மூலம் இத்தகைய இயற்கைச் சீற்றங்களிலிருந்து தான் விடுபட முடியும் என்றும் நம்பினான்.
இத்தகைய இட்டுக்கட்டல்களே பின்னாளில் மூடநம்பிக்கை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்தன எனலாம்.
எதிரிகளுடனான போரில் வெற்றிக்குப் பெரும்பங்காற்றி, இறுதியில் வீரச்சாவடைந்த போர்வீரனுக்கோ அல்லது மக்கள் கூட்டத்தின் மாவீரத் தலைவனுக்கோ அவனின் நினைவைப் போற்றும் வகையில்
‘நடுகல்’ எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்தது.
அது சங்க காலம் முதலே நடைமுறையாய் இருந்த பழக்கமாகும்.
இன்றும் கூட வழிபடப்படும்
அய்யனார்,
வேடியப்பன்,
நொண்டி,
கருப்பன்,
மதுரைவீரன்
போன்ற ‘மக்கள் தெய்வங்கள்’ நடுகற்களின் வழிமுறையே ஆகும்.
தொடக்ககாலத்தில் இவை எந்த மதத்தையும் சாராத மக்கள் வழிபாடுகளாக இருந்தன.
நடுகற்கள் என்றைக்குக் கடவுளர் சின்னங்களாக மாற்றப்பட்டதோ,
அன்றே அது அனைத்து வகை மூடச்சடங்குக்குள்ளும் சிக்கிக் கொண்டது.
மேலும் அந்தந்தப் பகுதிச் சூழலுக்கு ஏற்ப மத நிறுவனங்கள் பல மையம் கொண்டு, மக்களை மதமயமாக்கும் மூளைச் சலவையில் இறங்கின.
அச்சத்தின் அடிப்படையில் - உணர்வின் அடிப்படையில் பிறந்த வழிபாடுகள்,
பார்ப்பனிய ஆக்கிரமிப்புக்கு பின் பார்ப்பனிமயமாகி,
இந்து மத மூடச்சடங்குகளுக்கு வலுச்சேர்க்கும் வழிபாடுகளாக மாறிப்போயின.
மக்களை மதங்களாக - சாதிகளாகப் பல கூறுகளாக்கி நிலைப்படுத்தி வைக்க சடங்கு- சம்பிரதாயங்கள் அவசியம் என்ற வகையில் மக்களிடையே மூடத்தனத்தை விதைத்ததில் பார்ப்பனியத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்ததை ஆய்வறிவுடையார் அறிய முடியும்.
இன்று தொடரும் மூடநம்பிக்கைக்கான அடிப்படைக் கருதுகோள்களாக இருப்பது, கடவுள் நம்பிக்கையே இதை மத நிறுவனங்களே உரம்போட்டு வளர்கின்றன.
இதிலிருந்து நாம் அனைவரும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் மருத்துவர் நரேந்திர தபோல்கர் கொள்கையை பிடித்து அவர் நினைவுகளோடு தொடருவோம்.
--------------------------------------.