மத்திகிரி
தூய ஆரோக்கிய அன்னை
பாரம்பரிய மற்றும் புதிய
ஆலயத்தில்
சிறப்பாக கொண்டாடப்பட்ட
கிறிஸ்துமஸ் பெருவிழா
ஓசூர். டிச. 25. –
நூற்றாண்டுகள் ஆலயம்
ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய ஆலயம் மற்றும் மத்திகிரி புதிய ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாரம்பரிய ஆலயம் (1924 – 2024)
மத்திகிரி குதிரைப்பாளையத்தில் தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், 1924-ம் ஆண்டு கட்டப்பட்டு, 2024-ம் ஆண்டில் 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
2016-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அன்று
இந்த ஆலயத்தை தருமபுரி மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் அவர்கள்
பாரம்பரிய ஆலயமாக அறிவித்தார்.
வரலாற்று நினைவுச்சின்னம்
2023-ம் ஆண்டு நடந்த நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற ஆயர் அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க இந்த பாரம்பரிய ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.
பழமை மாறாமல் சீரமைப்பு
அதன்படி பாரம்பரிய ஆலயத்தின் பீடம், மேற்கூறை, ஆலய சுவர், கதவு மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்டவை பழமை மாறாமல்
புதுப்பிக்கப்பட்டு, நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருத்தலம்
மத்திகிரி குதிரைப்பாளையத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுகளாக பல வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டு, இப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக மறை சேவை மூலமாக தொண்டாற்றி
மக்களிடையே புகழ் பெற்று விளங்கும்,
பாரம்பரிய ஆலயத்தை ஒரு ஆண்டு காலத்துக்கு திருத்தலமாக
ஆயர் அவர்கள் அறிவித்துள்ளார்.
அதன்படி மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னையின் பாரம்பரிய ஆலய திருத்தலத்தில்
தினமும் ஜெப வழிபாடு நடைபெற உள்ளது.
பாரம்பரிய ஆலயத்தில்
கிறிஸ்துமஸ் விழா
இந்த சிறப்புமிக்க பாரம்பரிய ஆலயத்தில்
கிறிஸ்துமஸ் பெரு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து பிறப்பு
நிகழ்வை உணர்த்தும் வகையில்
மாட்டுக் குடில் அமைத்து குழந்தை இயேசு பிறப்பை தத்ரூபமாக
காட்சிப்படுத்தி இருந்தனர்.
பாரம்பரிய ஆலயத்தில் டிசம்பர் 24-ம் தேதி
இரவு 10 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா
சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில்
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து திருப்பாடல்களுடன், சிறப்பு திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் நற்கருணை ஆராதனை ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அருட் தந்தை ராயப்பர் கலந்து கொண்டார்.
அதேபோல மத்திகிரி நேதாஜிநகரில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் புதிய ஆலயத்தில்
கிறிஸ்துமஸ் பெரு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
டிஜிட்டல் ஸ்டார் குடில்
இந்த ஆலயத்தில் இயேசுகிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் டிஜிட்டல் ஸ்டார்-ல் குடில் அமைத்து. நவீன முறையில் குழந்தை இயேசு பிறப்பை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்த புதிய ஆலயத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு
நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு ஜெப வழிபாட்டில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையில் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து திருப்பாடல்களுடன், சிறப்பு திருப்பலி, சிறப்பு மறையுரை, நற்கருணை ஆராதனை ஆகிய ஜெப வழிபாடுகள் நடைபெற்றது.
இதில் திருத்தொண்டர் ஆல்வின் பங்கேற்று சிறப்பு மறையுரை ஆற்றினார்.
அருட்பணியாளர் ராயப்பர் கலந்து கொண்டார்.
இரண்டு ஆலய கிறிஸ்துமஸ் சிறப்பு ஏற்பாடுகளை
ஆலய பங்கு குழுவினர்,
அருட் சகோதரிகள்,
பாடல் குழுவினர்,
பக்த சபையினர்,
மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.
பாரம்பரிய ஆலயம் மற்றும் புதிய ஆலயம்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு ஜெப வழிபாடு முடிவில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
அதேபோல ஓசூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் மற்றும் பாகலூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உட்பட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு மாட்டுக்குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது.