நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்.
------------------------------------------------------------.
அறிவியல் வரலாற்று பதிவின்படி
உலகின் முதல் விஞ்ஞானிகள்
என்ற சாதனைக்குரியவர்கள்
பெண்கள்
பிப்ரவரி – 11-ம் தேதி
அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம்
2025 - Theme “Unpacking STEM Careers:
Her Voice in Science”
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப்ரவரி – 11. –
உலகின்
முதல் விஞ்ஞானிகள்
பெண்கள்
‘இந்திய விஞ்ஞானி ஒருவரின் பேரைச் சொல்லுங்கள்’, ‘உங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் விஞ்ஞானி யார்?’ என்று கேள்விகளை எப்படி மாற்றிக் கேட்டாலும் பலரது பதில் ஏதாவது ஓர் ஆண் விஞ்ஞானியின் பெயராகவே வந்து விழும்.
பெண்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது போலவே நம் மனங்களில் பதிந்துவிட்டது.
ஆனால், அறிவியலின் வரலாறோ உலகின் முதல் விஞ்ஞானிகள் பெண்கள்தான் என்கிறது. உணவுக்கும் மருந்துக்குமான தாவரங்களைத் தேர்ந்தெடுத்தது, வளர்க்க ஆரம்பித்தது போன்றவற்றில் தொடங்கி
நவீன அறிவியல் வளர்ச்சிகள்வரை பெண்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பங்கு அளப்பரியது.
சட்டென்று நம் கண்களில் அது தென்படாமல் போவதற்குப் பாரபட்சமான அணுகுமுறையும் முன்தீர்மானமுமே காரணமாக இருக்க முடியும்.
குடும்பம், ஆராய்ச்சி என இரட்டைக் குதிரை சவாரி, இடையில் திருமணம், குழந்தை பிறப்பு என அடுத்தடுத்த தடங்கல்கள் போன்றவற்றை எல்லாம் மீறி அறிவியல் துறையிலும் பெண்கள் சாதித்திருக்கிறார்கள்.
அப்படிச் சாதித்த இந்தியாவின் முதல் தலைமுறை பெண் விஞ்ஞானிகள் ஐவரைப் பார்ப்போம்:
தாவரவியல் தாரகை
கேரள ஜானகி (1897-1984)
கேரளத்தைச் சேர்ந்த
ஜானகி அம்மாள்
சென்னை ராணி மேரிக் கல்லூரி,
மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி
ஆகிய கல்லூரிகளில் இளநிலை, முதுநிலைத் தாவரவியல் படித்தார்.
திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருக்கப்போகும் பெண்களுக்கு அறிவியல் ஆராய்ச்சியெல்லாம் தோதுபடாது என்கிற நம்பிக்கை வலுவாக இருந்த காலம் அது.
முனைவர் பட்டம்
தாவரவியலில் பேரார்வம் கொண்ட ஜானகியோ அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 1931-இல் முனைவர் பட்டம் பெற்றார்.
பிற்காலத்தில் தாவர செல் மரபணுவியல் (சைட்டோ ஜெனிடிக்ஸ்), புவியியல் சார் தாவரவியல் (ஃபைட்டோ ஜியாகிரஃபி) துறைகளில் ஆராய்ச்சி நிபுணர் ஆனார்.
தலைமை இயக்குநர்
பிரிட்டனில் வேலை பார்த்த அவர், 1951-ல் நாடு திரும்பி ‘இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவன’த்தைச் சீரமைத்தார். நாட்டின் மிகப் பெரிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனமான அந்த அமைப்பின் தலைமை இயக்குநராகவும் செயல்பட்டார்.
பத்மஸ்ரீ விருது
மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் போன்றவை குறித்து ஆராய்ந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
வாய்ப்பு
மறுக்கப்பட்ட
கமலா
முனைவர் கமலா ஹோனி (1912 - 1998) உயிர்வேதியியல் துறையில் நாட்டிலேயே முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்ற பெருமையைக் கொண்டவர்.
முன்னதாக அன்றைய பெங்களூரில் இருந்த இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி நிதிநல்கைக்காக விண்ணப்பித்தார். ஆனால், பெண் என்பதால் நிதிநல்கையைப் பெறும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. அப்படி வாய்ப்பை மறுத்தவர் வேறு யாருமல்ல; இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சர். சி.வி. ராமன்தான்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
முனைவர் பட்டம்
இதையடுத்து பிரிட்டன் சென்ற கமலா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1939-ல் முனைவர் பட்டம் பெற்றார். அங்கு படித்த காலத்தில் தாவரத்தின் ஒவ்வொரு திசுவிலும் ‘சைட்டோகிரோம் சி’ என்கிற நொதி இருப்பதைக் கண்டறிந்தார்.
அனைத்துத் தாவர செல்களும் ஆக்சிஜனேற்றம் அடைய இந்த நொதி காரணமாக இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி அமைந்தது.
பிற்காலத்தில் சி.வி. ராமனின் முதல் பெண் ஆராய்ச்சி மாணவர்களில் கமலாவும் ஒருவரானார்.
தொடர்ந்த
அவருடைய ஆராய்ச்சிகள் எல்லாமே எளிய மக்களின் உணவை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
பதநீர் ஆராய்ச்சி
நீரா எனப்படும் பதநீரில் இருக்கும் ஊட்டச்சத்து தொடர்பான முன்னோடி ஆராய்ச்சியாளர் இவர்.
இந்தியா தந்த முதல் பெண்
முனைவர் ஆசிமா
ஆசிமா சாட்டர்ஜி (1917 - 2006), ஒரு வேதியியலாளர்.
இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு.
1944-ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் இதைச் சாதித்தார்.
கரிம வேதியியல், ஃபைட்டோ கெமிஸ்ட்ரி எனப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் வேதிப்பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சியாளர் இவர்.
புற்றுநோய் எதிர்ப்பு குணம் கொண்ட
நித்தியகல்யாணி
தாவரத்தில் உள்ள வின்கா ஆல்கலாய்டு தொடர்பாக ஆராய்ந்தவர்.
வலிப்பு நோய்க்கு
எதிரான மருந்து,
மலேரியாவுக்கு
எதிரான மருந்துகள்,
தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மருத்துவத் தாவரங்கள் தொடர்பான அவருடைய ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
வானிலை
விஞ்ஞானி
அன்னா மணி
அன்னா மணி (1918 - 2001), சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை படித்தவர்.
சர் சி.வி. ராமனுடைய இயற்பியல் மாணவிகளில் ஒருவர்.
பிற்காலத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் படித்த அவர், வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் துணைத் தலைமை இயக்குநராகச் செயல்பட்டிருக்கிறார்.
உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர்
வானிலை ஆராய்ச்சிக் கருவிகள் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டதற்காகப் புகழ்பெற்றவர்.
உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டிருக்கிறார். சூரியக் கதிரியக்கம், பாதகமான கதிரியக்கத்தைத் தடுக்கும் ஓசோன் படலம், காற்று ஆற்றல் ஆகியவற்றை அளப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நுண்ணலை ஆராய்ச்சியாளர்
ராஜேஸ்வரி சாட்டர்ஜி (1922 - 2010),
கர்நாடகத்தின் முதல் பெண் பொறியாளர்.
1946-ல் டெல்லி அரசின் கல்வி உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்றார். அங்கு மின்னணு பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று 1953-ல் நாடு திரும்பினார்.
அதன்பிறகு பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் மின் தகவல்தொடர்புப் பொறியியல் துறையில் சேர்ந்து, பின்னர் அதன் தலைவராகவும் உயர்ந்தார்.
அவரும் அவருடைய கணவர்
சிசிர் குமார் சாட்டர்ஜி
இணைந்து நுண்ணலை (மைக்ரோவேவ்) ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைத்தனர். இந்த ஆய்வகத்தில் நுண்ணலை பொறியியல் துறை சார்ந்து முன்னோடி ஆராய்ச்சிகளை இருவரும் மேற்கொண்டனர்.
----------------------------------------------.