கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம்
கால்நடை வாரச்சந்தையில்
அடிப்படை வசதிகள் இன்றி
திண்டாடும் விவசாயிகள்
குடிநீர் தொட்டியில் தண்ணீரின்றி
தவிக்கும் கால்நடைகள்
அடிப்படை வசதிகளை
செய்து கொடுக்க கோரிக்கை
ஓசூர். மே. 11. –
கால்நடை வாரச்சந்தை
கெலமங்கலம் பேரூராட்சியில் இயங்கி வரும் கால்நடை வாரச்சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு கழிவறை மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையம்
பின்புறம் விவசாயிகளிடையே
பிரபலமான கால்நடை வாரச்சந்தை கூடுகிறது.
ஞாயிற்றுக் கிழமைதோறும் கூடும் இந்த கால்நடை வாரச்சந்தை
ஆரம்பத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவில் நடைபெற்று வந்தது.
நாளடைவில் இந்த கால்நடை வாரச்சந்தையின் பரப்பளவு வெகுவாக குறைந்து போனதால், தற்போது 2 ஏக்கர் பரப்பளவில் குறுகிய வட்டத்தில் இந்த கால்நடை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த கால்நடை வாரச்சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஏராளமான ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இதில் குறிப்பாக நாட்டு மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ரூ.1 கோடி விற்பனை
இந்த கால்நடைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
வாரந்தோறும் ரூ.1 கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இதனால் இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமாக கெலமங்கலம் கால்நடை வாரச்சந்தை விளங்கி வருகிறது.
அடிப்படை வசதி
இப்படி பல்வேறு சிறப்புகளுடன் பரபரப்பாக இயங்கும் இந்த கால்நடை வாரச்சந்தைக்கு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கான கழிவறை வசதி மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்குள்ள கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்பாமல், குடிநீருக்கு பதிலாக குப்பை போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கால்நடைகளை கட்டுவதற்கு கூட போதிய இடவசதி இல்லை. ஆகவே, கால்நடை வாரச்சந்தையில் அடிப்படைவசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இது குறித்து கால்நடை விவசாயிகள் கூறும் போது, கெலமங்கலம் கால்நடை வாரச்சந்தை ஆக்கிரமிப்புகளாலும், தினச்சரி சந்தையை கட்டியதாலும்
9 ஏக்கரில் இருந்து 2 ஏக்கராக பரப்பளவு குறைந்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை நாட்களில் நடைபெறும் கால்நடை வாரச்சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல விவசாயிகள், வியாபாரிகளும் அதிகளவில் வருகின்றனர்.
இதனால் ஞாயிறுதோறும் பரபரப்பாக இயங்கும் இந்தச்சந்தையில் வாரந்தோறும் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
பண்டிகை நாட்களில் சுமார் ரூ.4 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும்.
இந்த கால்நடை
சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடு ஒன்றுக்கு ரூ.100 வசூல் செய்யப்படுகிறது.
ஆனால் வாரச்சந்தைக்கு வரும் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு உரிய கழிவறை வசதி மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் வசதி இன்றி தவிக்கும் நிலை உள்ளது.
ஆகவே கெலமங்கலம் கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கெலமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-----------------------------------.