தனி மனிதர்கள்,
நிறுவனங்களுக்கு மட்டுமல்ல,
ஒரு நாட்டின்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
அறிவுசார் சொத்துரிமைகள்
ஏப்ரல் 26 –
உலக அறிவுசார் சொத்துரிமை நாள்
(World Intellectual Property Day).
2025 ஆம் ஆண்டு கருப்பொருள் " அறிவுசார் சொத்துரிமை மற்றும் இசை: அறிவுசார் சொத்துரிமை இன் துடிப்பை உணருங்கள் "
"IP and Music: Feel the Beat of IP"
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப். 26. -
அறிவுசார் சொத்துரிமை நாள்
உலகில் பலருக்கும் இப்படி ஒரு நாள் இருப்பதோ, அல்லது அறிவு சார் சொத்துரிமை என்றால் என்ன என்பது குறித்தோ பெரிதாகத் தெரியாது. ஆனால், இன்று உலகம் முழுக்க அறிவுசார் சொத்துகளுக்கான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
இன்று பெரும் நிறுவனங்களின் நிலம், தொழிற்சாலை, மெஷினரிகளை விட அவர்களின் அறிவுசார் சொத்துகளின் மதிப்பு பன்மடங்கு அதிகம்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி
ஆப்பிள் தொழிற்சின்னத்தின்
மதிப்பு 183 பில்லியன் டாலர்.
சொத்துகளை, பொதுவாகத்
தொட்டுணரக் கூடிய சொத்துகள் (tangiable assets),
தொட்டுணர முடியாத சொத்துகள் (intangiable assets)
என இரண்டாகப் பிரிப்பார்கள்.
நிலம், கட்டடம், வாகனம் ஆகியவை தொட்டுணரக்கூடிய சொத்துகள்.
அறிவுசார் சொத்துகள் தொட்டுணர முடியாத சொத்துகள்.
வணிகக் குறிகள் (Trademark),
பதிப்புரிமை (காப்புரிமை),
புத்தாக்க உரிமைகள்
அல்லது காப்பொருளுரிமை (Patent), வடிவமைப்புகள் (Design),
நில இயல் குறியீடுகள்
(Geographical Indications),
தாவர வகைகள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்பு
(Plant Varieties and Plant Breeders Rights), ஒருங்கிணை மின்சுற்று (Integrated Circuits)
ஆகியவை அறிவுசார் சொத்துகள்
என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எப்படி தொட்டுணரக்கூடிய சொத்துகளுக்கு உரிமை கொண்டாட, பாதுகாக்க வழிமுறைகள் சட்டங்கள் உள்ளனவோ அது போன்று அறிவுசார் சொத்துகளையும் பாதுகாக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருவர் தம் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உருவாக்கும் புதிய முயற்சிகளை உரிமை பெற்று, பிறர் அபகரிக்கா வண்ணம் பாதுகாக்க முடிந்தால் மட்டுமே அவரும் பிறரும் புதிய முயற்சிகளில் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவார்கள் என்பதனை தொழிற் புரட்சி தொடங்கிய நாடுகள் விரைவில் உணர்ந்தன.
தொழிற் புரட்சி உருவாக காரணமாக இருந்த நீராவி இன்ஜின், பேடன்ட் பெற்ற ஒரு கண்டுபிடிப்பு.
1300-களிலிருந்தே இங்கிலாந்து
போன்ற நாடுகளில் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகத்
தனி நபர்களுக்கும்
நிறுவனங்களுக்கும்
ஏகபோக உரிமைகள் (Monopoly) வழங்கப்பட்டன.
அரசர் புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த உரிமையை வழங்குவார்.
அந்த உரிமை பத்திரத்துக்கு பேடன்ட் (Letters Patent) என்று பெயர்.
சரியான வழிகாட்டு முறைகள் இல்லாமல் இந்த உரிமைகள் வழங்கப்பட்ட வந்த நிலையில் அந்த உரிமைகள் ஒழுங்கு பெற 16-ம் நூற்றாண்டில் சட்ட வடிவம் பெற்றது (Statute of Monopolies).
இதுபோன்று வெனீஸ் போன்ற இதர ஐரோப்பிய நகரங்களிலும் 15-ம் நூற்றாண்டிலிருந்தே இந்த உரிமங்கள் வழங்கப்பட்டன. இவைதாம் இன்று நாம் காணும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களுக்கு முன்னோடி.
கடந்த 200 ஆண்டுகளில் உலகில் ஒவ்வொரு நாடும் இவ்வுரிமைகள் வழங்குவதற்குத் தக்க சட்டங்கள் இயற்றிக்கொண்டன.
பெரும்பாலும் அந்த நாடுகளில் உள்ள மத்திய அரசுதான் இந்த உரிமைகள் வழங்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.
இந்தியாவில் முதல் பேடன்ட்
1856-ல் வழங்கப்பட்டது.
அறையின் உத்தரத்தில் பெரிய விசிறி அமைக்கப்பட்டு அதனை வெளியிலிருந்து இயக்கும்படி செய்யும் `பங்கா’ என்னும் கருவிக்கு இந்தியாவில் முதல் பேடன்ட் கிடைத்தது.
ஆசியாவில் முதல் பேடன்ட் அளித்த பெருமை இந்தியாவையே சேரும்.
அறிவுசார் சொத்துரிமையை
பதிவு செய்தவர்கள் தங்கள் அனுமதியில்லாமல்
குறிப்பிட்ட காலத்துக்கு
பிறரை அந்தப் படைப்பை
உபயோகிக்கவோ,
பதிப்பிக்கவோ,
உற்பத்தி செய்யவோ,
இறக்குமதி செய்யவோ,
விற்கவோ
தடுக்க முடியும்.
இந்த ஏகபோக உரிமை, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த அறிவுசார் சொத்துரிமை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
அதனால் பிரிட்டிஷார் வகுத்த சட்டம் மாற்றப்பட்டு, நமக்குச் சாதகமான சட்டம் இயற்றப்பட்டது.
உதாரணமாக, 2005 வரை மருந்துகளுக்கு பேடன்ட் அளிக்கப்படவில்லை.
அதனால் மருந்துகளின் விலைகள் குறைவாக இருந்தது.
அதேநேரம்,
உலக நாடுகள் பெரும்பாலும் புதிய முயற்சிகள் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்து,
மதிப்பளித்து உரிமைகள் அளிப்பதின் மூலமே வளர்ந்திருக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் அதற்கு நல்ல உதாரணம்.
1980-கள் வரை எந்த அறிவுசார் சொத்துரிமை சட்டமும் இல்லாத கம்யூனிச நாடான சீனாதான்,
இன்று உலகிலேயே அதிக பேடன்ட் அளிக்கிறது.
அறிவுசார் சொத்துரிமையை Necessary evil எனப் பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த உரிமைகள் மூலம் படைப்பாளிகளும் யாரும் காப்பியடித்து விடுவார்கள் என்கிற பயமுமின்றி, புதிய புதிய படைப்புகளை உலகுக்குக் கொண்டு வரலாம்.
தனி மனிதர்கள், நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த உரிமைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
------------------------------------------------.