நீர்,
நிலம்,
காற்று,
ஆகாயம்,
என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன.
மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம்.
இயற்கையை நாம் பாதுகாத்தால்,
இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.
ஜூலை – 28.
உலக இயற்கை வள பாதுகாப்பு நாள்.
World Nature Conservation Day
நாளைய தலைமுறைக்கு மாசற்ற
பூமியை உருவாக்க உறுதியேற்போம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுலை. 28. –
தொடரும் மக்கள் தொகை பெருக்கம்,
வாகனங்களின் நெருக்கம்,
தொழிற்சாலைகளின் ஆதிக்கம்,
போன்றவற்றால் இயற்கையை மாசுகளில் இருந்து காப்பாற்றுவது இப்போது உலகநாடுகளுக்கு பெரும் சவலாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு 1948ம் ஆண்டு, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் உருவாக்கப்பட்டது.
சங்கம் உருவான ஜூலை 28ம்தேதி உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது.
எதிர்கால தலைமுறைக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இச்சங்கம் முயல்கிறது.
உலகம் முழுவதும் தாவரம், விலங்கினம் என உயிர்கள் பலவகைப்படுகின்றன.
நீர்,
நிலம்,
காற்று,
ஆகாயம்
என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன.
மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்.
மனித வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் இந்தநாள் அனுசரிக்கப்படுகிறது.
ஆதிகாலம் முதலே, மனிதனின் வாழ்க்கையானது இயற்கையை சார்ந்தே உள்ளது.
காடுகளுக்கு நடுவில் சுத்தமான காற்றை சுவாசித்து மனிதர்கள் வாழ்ந்த நிலை தற்போது மாறிவிட்டது.
நகரங்களில் பெரும் இரைச்சல்களுக்கு மத்தியில், அடுக்குமாடு குடியிருப்புகளில் வாழ்வதையே நாகரீகமாக கருதும் ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலங்களாக இருந்த நிலங்கள் தற்போது பிளாட்டுகளாக காட்சியளிக்கிறது.
மரங்கள் நிறைந்த பகுதிகள், மாநகர சாலைகளாக மாற்றம் கண்டுள்ளது.
நீருக்காக நிலத்தை துளையிட்டு, அதன்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
பூமிப்பந்து சூடாகி சுழன்று கொண்டிருக்கிறது.
அதை தணிக்க நவீனவசதிகள் என்ற பெயரில்,
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் உபகரணங்களை பயன்படுத்துவதில் தான் நாட்டம் உள்ளது.
இந்தவகையில் தற்போது நிலவும்
சுற்றுச்சூழல் மாசு,
காலநிலையில் மாற்றம்,
புவி வெப்பமயமாதல்
உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்
மனிதகுலத்தை நோய்களோடு போராட்டம்
நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
அடுத்த 12 ஆண்டுகளுக்குள் இருக்கின்ற இயற்கை வளங்களை கட்டாயம் பாதுகாத்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உலக நாடுகள் அனைத்தும் உள்ளது.
நமது நாடும் இதற்கு விதி விலக்கல்ல.
இதை கருத்தில் கொண்டே, இயற்கை வளங்களை மேம்படுத்தும் திட்டங்களில் அரசுகள் முனைப்புகாட்ட வேண்டும்
என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தூய்மையான இயற்கையும்,
அது சார்ந்த நல்வாழ்வும்
இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகள்.
பசுமையான சோலைகள்,
காடுகள்,
மரங்கள்,
உயிரினங்கள்,
புல்வெளிகள்,
விளைநிலங்கள்,
ஆறுகள்,
ஏரிகள்,
கடற்கரைகள்
என்று ஒவ்வொன்றும் நமக்கு அளப்பரிய பலன்களை தருகிறது.
இயற்கை என்பது நம் ஒருவருக்கு
சொந்தமானது அல்ல.
ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும்
சொந்தமானது.
நமது முன்னோர்கள், அதன் அருமை உணர்ந்து பேணிக்காத்து நம்மிடம்
விட்டுச் சென்றுள்ளார்கள்.
நாம் அதனை மாசுகளில் இருந்து காத்து,
நாளைய தலைமுறைக்கு தூய்மையுடன் ஒப்படைக்க வேண்டியது முழுமுதற்கடமையாக உள்ளது.
மொத்தத்தில் இயற்கையை நாம் பாதுகாத்தால் மட்டுமே,
அது நம்மை பாதுகாக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்துவோம்.
இந்த நாளில் அதற்கான உறுதியை முன்னெடுப்போம்.
-----------------------------------------------------------.