கடவுள் எங்கு இருக்கிறார் தெரியுமா? கடினமான நிலத்தை உழுதுகொண்டிருக்கின்றானே,
பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கின்றானே,
தொழிலாளி!
அங்கே இருக்கிறான்
– ரவீந்திரநாத் தாகூர்
மே – 7- 1861-
"இந்தியக் கல்விச் சூழலுக்காகக் கனவு கண்ட ரவீந்திரநாத் தாகூர்"
163 – வது பிறந்ததினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 7. –
``மந்திரம் ஓதுவதையும், பாடுவதையும், பிரார்த்தனை மணிகள் எண்ணுவதையும் விட்டுவிடுங்கள்.
எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, தன்னந்தனியாக இந்த இருளடைந்த மூலையில் யாரை வணங்குகிறீர்கள்? கண்களைத் திறவுங்கள், உங்கள் கடவுள் உங்கள் முன்னால் இல்லை என்பதைப் பாருங்கள்.
அவர் எங்கு இருக்கிறார் தெரியுமா? கடினமான நிலத்தை உழுதுகொண்டிருக்கின்றானே, பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கின்றானே, தொழிலாளி! அங்கே இருக்கிறான்.
அவன் ஆடை புழுதியால் படிந்திருக்கிறது. அவன் அவர்களிடையே வெயிலிலும், மழையிலும் இருக்கிறான்.
உங்கள் மலர்களையும், சாம்பிராணிப் புகையையும் தூர எறிந்துவிடுங்கள்.
உங்கள் ஆடை கிழிந்து கந்தலாகிவிட்டால் ஒன்றும் கெட்டு விடவில்லை. உழைப்பாலும், நெற்றி வியர்வையாலும் அவனை அடையலாம்"
என்ற வரிகளை அன்றே எடுத்துரைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
ஆம், மேற்கண்ட வரிகளை
தன்னுள் கொண்டதுதான் மிகச்சிறிய நூலான `கீதாஞ்சலி'.
இந்நூலை எழுதி இந்தியாவுக்கு இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்த ரவீந்திரநாத் தாகூரின் 163-வது பிறந்த தினம் இன்று.
உலகத்தரம் வாய்ந்த இலக்கியங்களை ஒவ்வொரு மொழியும் தந்தாலும், அந்த இலக்கியம் இன்னும் பிரபலமடைவதற்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டியது அவசியம்.
இதனால், அந்த இலக்கியம் உலகளவில் பலரின் மனங்களில் சென்று அமரும்.
தாய் மொழியில் எழுதப்படும் ஓர் இலக்கியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போது அதன் ஆழ்ந்த வரிகளின் சிறப்புத் தன்மை குறையும் என்பது பலரது கருத்து.
ஆனால், அதை உடைக்கும் வகையில் உலக அரங்கில் பேசப்படும் அற்புத நூலாக இருக்கிறது `கீதாஞ்சலி'.
அதை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய உலகில் அழியா புகழுக்குச் சொந்தக்காரராகவே இருந்து வருகிறார்.
1861- ம் ஆண்டு மே 7-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த தாகூர், இளம் பருவத்திலிருந்தே இலக்கியம், இசை, சமயம் எனத் தன் ஆர்வத்தை பறந்து விரிவடையச் செய்தார்.
கல்வி,
இசை,
கவிதை
என அனைத்திலும் சுதந்திர வேட்கையை எதிர்ப்பார்த்ததால் தாகூர் பள்ளியின் குறுகிய வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்ள விரும்பவில்லை.
`குருகுல கல்வி'
கல்வியில் எதிர்பார்த்த சுதந்திர வேட்கையை மற்றவர்களுக்கும் கொடுக்க முயற்சி எடுத்த தாகூர் திண்ணைப் பள்ளிகளும், உருதுப் பள்ளிகளும் ஒன்றிரண்டு ஆங்கில வழிப் பள்ளிகளும் மட்டுமே இருந்த வங்காளத்தில் `குருகுல கல்வி' என்பதே அதற்கு சரியானதாக இருக்கும் என்று எண்ணினார்.
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878-ல் இங்கிலாந்து அனுப்பிவைக்கப்பட்ட தாகூர் அங்குள்ள கல்விமுறை குறித்து நிறைய அறிந்துகொண்டார்.
குறிப்பாக, அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுத்தரப்படுகிறது? எது போன்ற பாடமுறையைக் கையாளுகின்றனர் என்பதை நேரடியாக அறிந்துகொண்டார்.
`நாளந்தா பல்கலைக்கழகம்'
இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்கள் புகழ்பெறுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் `நாளந்தா பல்கலைக்கழகம்' புகழ்பெற்று விளங்கியிருக்கிறது.
இந்த நிலையில், கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தாமல், மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த முடியாது எனத் தாகூர் நம்பினார்.
`சாந்தி நிகேதன்'
அதன்படி, இயற்கைச் சூழலில் அமையப் பெற்ற பள்ளி வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க வருவதை மகிழ்ச்சியான செயலாகக் கருத வேண்டும்.
தண்டனை இல்லாத, எளிய, தனித்துவமான கற்றல் முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு `சாந்தி நிகேதன்' என்ற பள்ளியைக் கொண்டு வந்தார்.
இதில்
இயற்கையைப் பாதுகாத்தல்,
ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல்,
பெண்களின் சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளித்தல்,
தீண்டாமையை நீக்குதல்,
மதச்சார்பின்மை,
அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பது,
இசை மற்றும் நுண்கலைகளில் தேர்ச்சி பெறச்செய்வது
போன்றவற்றை
முதன்மைப்படுத்தினார்.
இன்று,
`விஸ்வபாரதி பல்கலைக்கழக'மாக வளர்ந்து நிற்கும் `சாந்தி நிகேதன்' ஒரு காலத்தில் சிறிய ஆஸ்ரமமாகத் தொடங்கப்பட்டது.
நான்கு சுவர்களுக்குள் மாணவர்களை அடைத்துப் பாடம் கற்பிப்பதைவிட, திறந்த வெளியில் கற்றுத்தருவது மாணவர்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும் என்று தாகூர் கருதினார்.
மாணவனுக்கு ஆண்டுக்கு ஒரு பரீட்சை வைத்து அவனது திறமையை மதிப்பிடுவதைவிட, அவனது ஆளுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து, முடிவில் அவனை அறிவில் சிறந்தவனாக வெளியே
அனுப்பி வைப்பதே `சாந்தி நிகேத'னில் இருந்த கல்விமுறை.
பொருளாதார மேதை
அமர்த்தியா சென்,
புகழ்பெற்ற இந்திய இயக்குநரான
சத்யஜித்ரே
ஆகியோர் சாந்தி நிகேதனில் படித்தவர்கள்.
சாந்தி நிகேதனில் மூன்று வருடங்கள் படித்த சத்யஜித்ரே `அது, என் வாழ்வின் வசந்த காலம்' என்றார்.
தேசிய கீதம்
நம் தேசிய கீதத்தை எழுதியவர் இவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இயற்கையோடு இணைந்த கல்வி என்பது உடல், அறிவு, ஒழுக்க வளர்ச்சிக்கு வித்தாகும் என்பதில் பெரிதும் நம்பிக்கைக் கொண்டிருந்தார் தாகூர்.
அவர் தொடங்கிய `சாந்தி நிகேதன்' இன்றும் வங்காளத்தில் செயல்பட்டு வருகிறது. கல்வி வணிகமாகி, சிறைக்கூடங்களைப் போல நான்கு சுவர்களுக்குள் மாணவர்கள் பாடம் கற்கும் இன்றையச் சூழல் மாறி தாகூரின் கல்விக் கனவு மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
-------------------------------.