ஜோதி தமிழ் இணையஇதழ்
அண்மைசெய்திகள்
அண்மைசெய்திகள்
நம் பள்ளி – நம் பெருமை
ஓசூர் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
கல்விச்சீர் திருவிழா மற்றும்
குழந்தைகள் தின விழா
ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும்(பொறுப்பு), ஓசூர் கல்வி மாவட்ட அலுவலருமான முனிராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஓசூர். நவ. 14 –
by Jothi Ravisugumar
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பேடரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் “நம் பள்ளி – நம் பெருமை” திட்டத்தை முன்னிட்டு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் திருவிழா மற்றும் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளி, இடவசதி பற்றாகுறை காரணமாக மூன்று இடங்களில் செயல்படுகிறது. இந்தப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 22 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 917 மாணவ, மாணவிகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இவர்களில் 200 மாணவ, மாணவிகள் இந்தியை தாய் மொழியாக கொண்ட வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் பள்ளி – நம் பெருமை
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் நம் பள்ளி – நம் பெருமை திட்டத்தை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதியன்று குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து பெற்றோர்களும் பள்ளிக்கு தேவையான கல்விச் சீர் பொருட்கள் வழங்கலாம் என பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக முடிவெடுக்கப்பட்டது.
குழந்தைகள் தின விழா
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் திருவிழாவுக்கு 3-வது வார்டு மாநகர உறுப்பினர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும்(பொறுப்பு), ஓசூர் கல்வி மாவட்ட அலுவலருமான முனிராஜ் கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ், அன்னய்யா, பி.டி.ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமாரவேல் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் காயத்ரி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் முன்னாள் பிரதமர் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கல்விச் சீர் ஊர்வலம்
பேடரப்பள்ளி சிவன் கோவில் முன்பு காலை 10 மணிக்கு புறப்பட்ட கல்விச் சீர் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பங்கேற்று நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் குத்து விளக்கு, பீரோ, போர்டு, பக்கெட், குடம், பாய் உட்பட சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று பேடரப்பள்ளி அரசுப்பள்ளிக்கு கல்விச் சீர் கொடுத்தனர்.
மெடல் - சான்றிதழ்கள்
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 1-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை 25 பிரிவுகளில் பயிலும் 50 மாணவ, மாணவிகளை பாராட்டி மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த அரசுப்பள்ளியில் பயிலும் 10 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
குழந்தைகள் தினவிழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் உட்பட 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் எஸ்எம்சி குழுவினர், பிடிஏ குழுவினர், ஐடிகே குழுவினர், முன்னாள் மாணவர் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பொன்நாகேஷா செய்திருந்தார்.