செய்திகள்
ஆன்மிகம்
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு விழா
ஓசூர்.நவ.01 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி குதிரைப்பாளையத்தில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு விழா நடப்பாண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நூற்றாண்டு தொடக்க விழா
2023-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ம் தேதி நடைபெற்ற நூற்றாண்டு தொடக்க விழாவில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்து ஆரடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையுடன் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் பாரம்பரிய ஆலயத்தை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து பாரம்பரிய ஆலயத்தில் பல மாதங்களாக நடைபெற்று வந்த ஆலயத்தை சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில் ஆலயத்தின் பீடம், மேற்கூறை, கதவுகள், ஜன்னல்கள், ஆலய சுவர், ஆலய கோபுரம், புனித லூர்து அன்னை கெவி மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆலயம் சார்ந்த பொருட்கள் பழுது நீக்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னமாக பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு விழா
இந்த புதுப்பிக்கப்பட்டுள்ள பாரம்பரிய ஆலயத்தில் நடப்பாண்டு நவம்பர் 23-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கூட்டு நன்றி திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஓசூர் வட்ட முதன்மை குரு பெரியநாயகம் தலைமையில் தேர் பவனி நடைபெறுகிறது. இதில் பங்கு தந்தை கிறிஸ்டோபர், அருட்பணியாளர் ராயப்பர் மற்றும் முன்னாள் பங்கு தந்தையர்கள், மறை மாவட்ட குருக்கள், அருட்கன்னியர்கள் பங்கேற்கின்றனர்.
லூர்து அன்னை கெவி
குருக்கள் இல்லம்
1845-ம் ஆண்டு தந்தை ஷார்போனா அவர்களால் குருக்கள் இல்லம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் 1937-ல் பழைய பாரம்பரிய ஆலயம் அருகே இன்று அமைந்துள்ள குருக்கள் இல்ல கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டு 1938-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது.(Fr.Brun). 1847-ம் ஆண்டு வரை கோவிலூரில் இருந்த மறைப்பணியாளர்கள் மத்திகிரியில் பொறுப்பேற்றிருந்தனர்.
மத்திகிரி ஆலய நூற்றாண்டு வரலாறு(1924 – 2024)
நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ள மத்திகிரி, என்பது ஒரு காரணப்பெயராகும். ஏரிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஊர் என பொருள் கொள்ளலாம்.
1828-ம் ஆண்டு ஆங்கிலேயர் அரசு மத்திகிரியில் குதிரைப்பண்ணை ஆரம்பித்த போது, பணியாளர்களையும் அழைத்து வந்து குடியேற்றியுள்ளனர். இதனால் மத்திகிரியைச் சுற்றிலும் குசினிபாளையம், காடிபாளையம், குதிரைப்பாளையம் என்ற பெயர்களில் குடியிருப்பு பகுதிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு 1,660 ஏக்கர் பரப்பளவில் மத்திகிரி கால்நடைப் பண்ணை அமைந்துள்ளது.
1784-ம் ஆண்டுக்கு முன்னரே மத்திகிரியில் சிற்றாலயமும், கல்லறைகளும் இருந்ததாக அருள்தந்தை டெஃபினி குறிப்பிடுகிறார். மத்திகிரி குதிரைப்பாளையத்தை ஒட்டி இரண்டு ஏக்கர் நிலம் கத்தோலிக்க தேவாலயத்துக்கு ஒதுக்கப்பட்டு, முதல் ஆலயம் 1840-ல் கட்டப்பட்டது.(அருள்தந்தை ஜான் மாந்தடம், 1837-ம் ஆண்டு என குறிப்பிடுகிறார்). அதனை தொடர்ந்து பழைய ஆலயத்தின் அடித்தளத்தின் மீது 1924-ம் ஆண்டு புதிய ஆலயம்(பாரம்பரிய ஆலயம்) கட்டப்பட்டது.
பின்பு குதிரைப்பண்ணை அகமத் நகருக்கு மாற்றப்பட்டதால் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்தது.
மைசூர், புதுத்சேரியுடன் தொடர்பு
1847-ல் மைசூர் மறைபணித் தளத்தோடும், பின்னர் 1850-ம் ஆண்டு முதல் 1858 வரை புதுச்சேரி மறைபணித் தளத்தோடும், பின்னர் மீண்டும் 1858-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை மைசூர் மறை மாவட்டத்தோடும் மத்திகிரி இருந்தது. 1875-ம் ஆண்டு முதல் 1909 வரையுள்ள திருமுழுக்கு பதிவேட்டில் ஓசூர், ஒன்னல்வாடி, சென்னாத்தூர், தேன்கனிக்கோட்டை, தண்டரை, மதகொண்டப்பள்ளி, சொல்லேபுரம், பாரந்தூர், நாகசந்திரம், பெலகேரி, கோபசந்திரம், நல்லசந்திரம், பௌகொண்டப்பள்ளி, தாசரப்பள்ளி, கெம்பத்பள்ளி, கொட்டானூர், மரதனப்பள்ளி, பிலிகுண்டு, ஆனேக்கல், அகொண்டப்பள்ளி, எடப்பள்ளி ஆகிய ஊர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இக்காலகட்டத்தில் இன்றைய தேன்கனிக்கோட்டை, ஓசூர் மறைவட்டங்களிலுள்ள பங்குகள் அனைத்தும் மத்திகிரியின் கீழ் இருந்தன என்று கூறலாம்.
FSM சபை
மருத்துவமனை, ஆங்கிலப்பள்ளி தொடக்கம்
1963-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி அன்று “எப்.எஸ்.எம் சபை” சகோதரிகள் தங்களது பணியினை மத்திகிரியில் ஆரம்பித்தனர். மத்திகிரி மற்றும் அதைச்சுற்றியுள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு 1974-ம் ஆண்டு ஜுலை 8-ம் தேதியன்று திறக்கப்பட்டது. மருத்துவ சேவையுடன், கல்வி சேவைக்காக, 1980-ல் ஆங்கிலப்பள்ளியும் தொடங்கப்பட்டது. அன்று முதல் மருத்துவ பணியிலும், கல்விப் பணியிலும் அருட் சகோதரிகள் அயராது சேவையாற்றி வருகின்றனர்.
புதிய ஆலயம்
ஓசூரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மத்திகிரி பங்கின் வளர்ச்சிக்காக 1991-ம் ஆண்டு மத்திகிரி நேதாஜிநகர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அருள்தந்தை தோமினிக் ராஜா பங்கு தந்தையாக பணியாற்றிய போது, புதிய நிலத்தில் பங்கு ஆலயம் கட்டப்பட்டு, 2001-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதியன்று புதிய ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஆலயம் அருகில் அருள் தந்தை ரொசாரியோ அவர்களின் பணிக்காலத்தில் குருக்கள் இல்லம் கட்டப்பட்டு, 2005-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய குருக்கள் இல்லத்தில் முதலில் தங்கி பணியாற்றத் தொடங்கியவர் அருள்தந்தை சக்கரையாஸ் அடிகளார் அவர்களே. அருள்தந்தை ஜான்கொன்னடி அடிகளார் தம் பணிக்காலத்தில் ஆலய பீடத்தை அழகுபடுத்தியது, பங்கு ஆலயத்தின் புதிய முகப்புத்தோற்றத்தை கலைநயத்தோடு அமைத்தது, பழைய ஆலயத்தை புதுப்பித்து சுற்றுச்சுவர் கட்டியது, போன்ற பணிகளை சிறப்பாகச் செய்தார்.
பாரம்பரிய ஆலயம்
2016-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியன்று மத்திகிரியின் பழைய ஆலயம் மறைமாவட்ட பாரம்பரிய ஆலயமாக தருமபுரி மறைமாவட்ட ஆயரால் அறிவிக்கப்பட்டது.
செயின்ட் சேவியர் அகடமி பள்ளி
2016-ம் ஆண்டு ஜுன் மாதம் அருள்தந்தை எஸ். பெரியநாயகம் அவர்களால் மத்திகிரியில் செயின்ட் சேவியர் அகடமி என்ற பள்ளி துவங்கப்பட்டு இயங்கி வருகிறது.
பணியாற்றிய பங்குதந்தையர்கள்
(சேலம் மறைமாவட்டம் உருவான பின்னர்)
1930 – 1931 – அருள்திரு. பெர்த்தெயி(J.B.Bertail)
1932 – – அருள்திரு. ஷாஸேயின்(Chassain)
1933 – 1934 – அருள்திரு. ஜெஸ்ஸோ(A.Jesseau)
1934 – 1954 – அருள்திரு. புருன்(Brun)
1954 – 1956 – அருள்திரு. நலே(R.Nalais)
1956 – 1957 – அருள்திரு. பிளோன்(J.Blons)
1958 – 1964 – அருள்திரு. குவின்கெனல்(C.Quinqueuel)
1964 – 1973 – அருள்திரு. அலெக்ஸாண்டர் ஷவேலி
1973 – 1974 – அருள்திரு. தாமஸ் கீராஞ்சிரா
1974 – 1984 – அருள்திரு. டி.சி.ஜோசப்.
1984 – 1987 – அருள்திரு. சி.எஸ். அந்தோணிசாமி.
1987 – 1993 – அருள்திரு. எல். லெக்ரான்.
1993 – 2001 – அருள்திரு. ஆர். தோமினிக்ராஜா.
2001 – 2006 – அருள்திரு. ஏ. ரொசாரியோ.
2006 – 2011 – அருள்திரு. எம்.சக்கரையாஸ்.
2011 – 2016 – அருள்திரு. ஜான்கென்னடி.
2016 – 2021 – அருள்திரு. எஸ். பெரியநாயகம்.
2021 – அருள்திரு. கிறிஸ்டோபர்.
அருள்தந்தை நலே(1954 – 1956) கல்லறை
பழைய பாரம்பரிய ஆலய வளாகத்தில் அருள்தந்தை நலே(Nalais. MEP) அவர்களின் கல்லறை உள்ளது. தந்தை நலே அவர்கள், 1906-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதியன்று பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். 1931-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதியன்று குரு பட்டம் பெற்று, சேலம் மறை மாவட்டத்தில் பணிபுரிய, 1932-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதியன்று பிரான்சில் இருந்து புறப்பட்டார். தமிழ்நாட்டில் மரவனேரி விடுதி, கோவிலூர் ஆகிய ஊர்களில் உதவி தந்தையாகவும், பின்னர் 1935-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை ஆத்தூர், 1948-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை மதகொண்டப்பள்ளி, 1954-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை மத்திகிரி ஆகிய இடங்களில் பணியாற்றி 1956-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மறைந்தார். அவரது விருப்பத்தின்படி மத்திகிரி ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை