தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின்
கட்டுப்பாட்டில் இருந்த
‘மனம்’
என்ற ஆழ்கடலை
அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த சாதனையாளர்
சிக்மண்ட் பிராய்ட்
மே - 6 – 1856 -
நவீன மனநல மருத்துவத்தின்
தந்தை என்று போற்றப்படும்
ஆஸ்திரிய மருத்துவர்
சிக்மண்ட் பிராய்ட்
169 -வது பிறந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 6. –
அன்றைய ஆஸ்திரியப் பேரரசின் ஃபிரெய்பர்க் நகரில் (தற்போது செக் குடியரசில் உள்ளது) 1856-ல் பிறந்தார். சிறு வயது முதலே அறிவுக் கூர்மையுடன் விளங்கினார். குடும்பம் வறுமையில் வாடினாலும் இவரது கல்விக்காக பெற்றோர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.
தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பம் வியன்னாவில் குடியேறியது. அங்குள்ள தரமான பள்ளியில் அவரைச் சேர்த் தனர் பெற்றோர்.
சிறந்த மாணவனாகத்
திகழ்ந்தவர், வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.
செரிப்ரல் பால்ஸி,
அபேஸியா
போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி – மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார். அதன் வெளிப்பாடுகள், ஆழ்மனத் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை வகைப்படுத்தினார்.
கனவுகள்
கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். ‘உணர்வுகளைக் கனவுகள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன. கனவுகள் ஒழுங்கற்றவை. உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு’ என்றார்.
தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள் முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல. அது தொடர்ந்து மாறுவது என்பார்.
அதை
உயிரோட்டமுள்ள உளவியல்
(Dynamic Psychology)
என்ற பெயரில் முன்வைத்தார்.
இது அவரது முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
இயக்கவியல் விதிகளை மனிதனின் ஆளுமைக்கும் அவனது சிகிச்சைக்கும்கூட பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தது இவரது மிகப் பெரிய சாதனை.
மனநல மருத்துவத் துறையில்
இது ஒரு மைல் கல் கண்டுபிடிப்பாகும். மனிதனின் குண இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்கிக் கூறவும் இது பயன்படுகிறது.
பாலியல் விருப்பு என்பது மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என்றார். கவிஞர்கள், சிந்தனையாளர்களுக்கு ஆழ் மனதின் தாக்கம் அதிகம் என்பதையும் கண்டறிந்து கூறினார்.
உணர்வால் உந்தப்படும் இயல்பு
(Id-Identity),
முனைப்பால் உந்தப்படும் இயல்பு
(Ego),
மிகையான அகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
என்று மனிதனின் குண இயல்புகளை வகைப்படுத்தினார்.
இந்த மூன்று குணநலன்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது என்றும் கூறினார்.
அதுவரையில்
தத்துவவாதிகள்,
ஆன்மிகவாதிகள்,
உளவியலாளர்களின்
கட்டுப்பாட்டில் இருந்த
‘மனம்’ என்ற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் 83 வயதில் (1939) மறைந்தார்.
-----------------------------------.