ஓசூர் மாநகராட்சியில்
குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில்
கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீர்
பெற பணிகள் தீவிரம்
- மேயர் தகவல்
ஓசூர். நவ. 22.-
By Jothi Ravisugumar
மாமன்ற கூட்டத்தில் எம்.பி., எம்எல்ஏ.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஓசூர் மாநகராட்சிக்கு கூடுதலாக 50 மில்லியன்
லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு முதல் குடிநீர் பிரச்சனை இருக்காது என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.
ஓசூர் மாநகராட்சி அண்ணா கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமை வகித்தார். துணைமேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
ஓசூர் பாரதிதாசன் நகரில் புதியதாக நுண்ணூயிர் செயலாக்க மையம் கட்டுதல்.
24-வது வார்டு ராம்நகர் பள்ளம் பகுதியில் பழுதடைந்துள்ள ஆயில் என்ஜினை சரிசெய்தல்.
18-வது வார்டு பொதிகை நகரில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி பகிர்மான குழாய் அமைத்தல்
அந்திவாடியில் புதியதாக நுண்ணுயிர் செயலாக்க மையம் கட்டுதல்
உட்பட மொத்தம் 78 தீர்மானங்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் கோபிநாத், சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் மற்றும் உறுப்பினர்கள் பேசினர்.
கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத்
ஓசூர் மாநகரில் விமான நிலையம் அமைக்க 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
பெங்களுர் மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓசூர் ராமநாயக்கன் ஏரியை ஒட்டியுள்ள பூங்காவுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்டவேண்டும் என்றார்.
ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
ஓசூர் மாநகராட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதற்கேற்ப புதிய பேருந்து நிலையம், ரூ.550 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் மகளிருக்கு அனுமதி, இலவச பேருந்து பயணம், கலைஞர் உரிமைத்தொகை, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
ஓசூர் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்ட வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது 13 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீர் ஓசூர் மாநகராட்சிக்கு கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் ஓசூர் மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனை இருக்காது.
ஓசூர் மாநகராட்சியில் ரூ.5 கோடியில் காந்தி சிலை அருகில் புதியதாக வணிக வளாகம் அமைக்கப்படும். ஓசூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் மருந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும்.
ஓசூர் ஜிஆர்டி முதல் பாகலூர் வரையிலான சாலை ரூ.16 கோடி மதிப்பில் விரைவில் புதுப்பிக்கப்படும்.
ஓசூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து மண் சாலைகளும் தார் சாலைகளாக மாற்றப்படும்.
பொது சுகாதார குழு
தலைவர் மாதேஸ்வரன்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள சிப்காட் பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக கணக்கிடப்படுவதால்
ஓசூர் மாநகராட்சியால் தொழில் நிறுவனங்களுக்கான வரி விதிக்க இயலாமல் உள்ளது. ஆகவே உடனடியாக ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களை கணக்கிட்டு அந்த இடங்களுக்கான வரியை தொழில் நிறுவனங்களுக்கான வரியாக மாற்றி அமைத்தால், மாநகராட்சிக்கான வரி வருவாய் உயரும். கோடி கணக்கில் தொழில் செய்வோரிடம் வரி வசூல் செய்வதை விட்டுவிட்டு, மக்களிடம் வரி வசூலிக்கிறோம். இந்த கூட்டத்தில் மேயர் மட்டுமின்றி மக்களவை உறுப்பினர், எம்எல்ஏ, ஆகியோரும் உள்ளதால், அனைரும் இணைந்து
சட்டரீதியாக ஒருமுடிவெடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். முதல்வர் கண்டிப்பாக செய்வார் என்றார்.
இந்த மாமன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள குடிநீர், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து பேசினார்கள்.