1918-ல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கிய
சாதனையாளர்
‘சிந்தனைச் சிற்பி’
ம.சிங்காரவேலர்
பிப்ரவரி. 18 – 1860 –
தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனாவாதியும் சமூக சீர்திருத்தவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான
ம.சிங்காரவேலர்
165- வது பிறந்த தினம் –
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 18. -
* பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் சென்னையில் 1860-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி பிறந்தார் ம.சிங்காரவேலர்.
பள்ளிக் கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு சிறுவயது முதலே மனம் வருந்தினார்.
வழக்கறிஞர் பணி
* சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1907-ல் வழக்கறிஞராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை அறிந்திருந்தார். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
* மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றத்தில் எதிராளியால் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த வழக்கை வென்றுவிட்டு வெளியே வந்து, தன் கருப்பு அங்கியைக் களைந்து இனி நீதிமன்றத்துக்கு வரப்போவதில்லை என்றும், என் மக்களுக்காகவே பாடுபடுவேன் என்றும் கூறினார்.
விடுதலைப்போராட்ட தியாகி
* காந்தியடிகளைத் தன் தலைவராக ஏற்றார். தேச விடுதலைப் போராட்டங்களில், சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஊர் ஊராகச் சென்று கல்வியறிவு இல்லாத தன் மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். சிறந்த பேச்சாளரான இவர் மக்களிடையே உரையாற்றி தேசிய விழிப்புணர்வையும் ஊட்டினார்.
இந்தியாவின் முதல் தொழிற்சங்கம்
* வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையை எதிர்த்து சென்னையில் மாபெரும் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். தொழிலாளர்கள் படும் துயரத்தைக் கண்டு தொழிலாளர்களின் போராளியாகவே மாறினார்.
1918-ல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்.
‘லேபர் கிஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்’ என்ற கட்சியை 1923-ல் தொடங்கினார்.
பத்திரிகை ஆசிரியர்
* ‘லேபர் கிசான் கெஜட்’
என்ற ஆங்கில வார இதழையும்
‘தொழிலாளன்’
என்ற தமிழ் வார இதழையும்
நடத்தினார்.
தொழிலாளர் போராட்டங்கள், தென்னிந்திய ரயில்வே போராட்டங்களில் மும்முரமாகப் பங்கேற்றதுடன் தனது பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையுரை
* 1925-ல் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார். 1928-ல் தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு 1930-ல் விடுதலையானார்.
மதிய உணவு திட்டம்
சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்.
* பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்தார்.
பொதுவுடைமை இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றார்.
‘கடவுளும் பிரபஞ்சமும்’,
‘மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’,
‘பிரபஞ்சப் பிரச்சினைகள்’,
‘விஞ்ஞானத்தின் அவசியம்’,
‘பகுத்தறிவென்றால் என்ன?’,
‘பிரபஞ்சமும் நாமும்’
உள்ளிட்ட பல நூல்களை
எழுதியுள்ளார்.
* மீனவர் வீட்டு வசதித் திட்டத்துக்கு தமிழக அரசு இவர் பெயரைச் சூட்டியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு
‘சிங்கார வேலர் மாளிகை’
என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“போர்க்குணம் மிகுந்த நல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி”
என்று இவரைப் பற்றி பாரதிதாசன் பாடியுள்ளார்.
* ‘சிந்தனைச் சிற்பி’ என்று போற்றப்பட்டவரும், தொழிற்சங்கவாதியும் மீனவர் வாழ்வில் விடிவெள்ளியாகத் திகழ்ந்து அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்தவருமான ம.சிங்காரவேலர் 1946-ம் ஆண்டு 86-வது வயதில் மறைந்தார்.
--------------------------------------------------------.