மனித குலம் தோன்றியது ஆசியாவில்தான், அதிலும் குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில்தான்
என்று கணித்த உயிரியலாளர்
எர்ன்ஸ்ட் ஹேக்கல்
பிப்ரவரி 16 – 1834 -
ஜெர்மன் உயிரியலாளர் எர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel)
191 – வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 16. –
எர்ன்ஸ்ட் ஹேக்கல்
# ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த பிரஷ்யாவின் போட்ஸ்டம் நகரில் (1834) பிறந்தார்.
தந்தை அரசு அதிகாரி. பள்ளிப் படிப்பை முடித்ததும் வூர்ஸ்பர்க், பெர்லினில் மருத்துவம் பயின்றார்.
# விலங்கியலில் ஆர்வம் அதிகரித்தது. ஆனாலும் குடும்பத்தினரின் விருப்பப்படி 1857-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்று, சில காலம் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஓவியம் தீட்டுவதில் அபாரத் திறன் பெற்றிருந்ததால், முழுநேர ஓவியர் ஆகிவிடலாமா என்ற எண்ணமும் துளிர்விட்டது.
திருப்பு முனை
# சார்லஸ் டார்வின் எழுதிய
‘ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசீஸ்’
என்ற நூலை 25 வயதில் படித்தது இவரது வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இயற்கையியல், உயிரியலில்தான் கவனம் செலுத்துவது என்ற முடிவுக்கு வந்தார்.
டார்வின் சந்திப்பு
# ஜேனா பல்கலைக்கழகத்தில் 1861-ல் விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கு ஒப்பீட்டு உடற்கூறியலில் பேராசிரியராகப் பணியாற்றினார். மொத்தம் 47 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். உயிரினங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1866-ல் ஹெர்மன் ஃபோல் என்பவருடன் கேனரி தீவுகளுக்கு சென்றபோது டார்வினை சந்தித்தார்.
# நார்வே, எகிப்து, துருக்கி, கிரீஸ் உட்பட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து
பெயர் சூட்டினார்.
புதிய உயிரியல் சொற்கள் அறிமுகம்
அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய இனவழிப் படிவரிசையை உருவாக்கினார். உயிரியல் தொடர்பான பல சொற்களை அறிமுகம் செய்தார்.
# பல்வேறு வகை உயிரினங்கள் குறித்த விரிவான விவரங்களுடன் வண்ணமயமான படங்களுடனும்
‘ஆர்ட் ஃபாம்ஸ் ஆஃப் நேச்சர்’
என்ற நூலை எழுதினார்.
40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
# ‘ஐரோப்பிய போர்’ என்று குறிப்பிடப்பட்ட சண்டை தொடங்கிய காலகட்டத்தில், இவர் ஒரு கட்டுரை எழுதினார். ‘போரில் ஈடுபடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பார்த்தால் இது முதல் உலகப் போராக மாறும்’ என்று அதில் குறிப்பிட்டார். அதுபோலவே அந்த சண்டை, பிறகு ‘தி கிரேட் வார்’ என்றும் அடுத்து, முதல் உலகப் போராகவும் மாறியது.
# முதுகெலும்பு இல்லாத உயிரினங்களின் உடற்கூறியலாளர் என குறிப்பிடப்பட்டார். அறிவியல் அடிப்படையில் உயிரினங்களைப் பிரித்தார்.
உயிரினங்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என முதலில் பிரித்தவர் இவரே.
மனிதரை 10 இனங்களாகப் பிரித்து, அதற்கான காரணத்தை விளக்கினார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.
# ‘மனித குலம் தோன்றியது ஆசியாவில்தான், அதிலும் குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தில்தான்’ என்பது இவரது கணிப்பு.
‘தி ஹிஸ்ட்ரி ஆஃப் கிரியேஷன்’
என்ற நூலில் இதுகுறித்து விரிவாக எழுதியுள்ளார்.
# பரிணாமக் கோட்பாடு வரலாற்றில் இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல்வேறு அறிவியல் அமைப்புகளிடம் இருந்து ஏராளமான பரிசுகள், பட்டங்களைப் பெற்றவர்.
அறிவியலாளர்,
தத்துவமேதை,
ஓவியர்,
அரசியல் விமர்சகர்
என பல்துறை வித்தகராக இருந்த எர்ன்ஸ்ட் ஹேக்கல் 85-வது வயதில் (1919) மறைந்தார்.
---------------------------------------------------.