கக்கதாசம் அரசு உயர்நிலைப்பள்ளி
மகிழ் முற்றம் துவக்க விழாவில்
ஐந்து வண்ண சீருடையில்
மாணவர்கள் பங்கேற்பு
சொந்த செலவில் சீருடை வழங்கி
ஆசிரியை அசத்தல்
ஓசூர். நவ. 21. –
by Jothi Ravisugumar
மகிழ் முற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம் கக்கதாசம் அரசு உயர்நிலைப்பள்ளியில்
ஐந்து வண்ண சீருடையில், ஐந்து குழுக்களாக மாணவ, மாணவிகள் கொடியேந்தி அணிவகுக்க, மகிழ் முற்றம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் தலைமையாசிரியர் அன்னபூர்ணா தலைமை வகித்து 5 குழுக்கள் அடங்கிய மகிழ் முற்றத்தை துவக்கி வைத்தார்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல் படி
கக்கதாசம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மகிழ் முற்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து வண்ண குழுக்கள்
ஓவ்வொரு குழுவுக்கும் ஒரு வண்ணம் என ஐந்து வகை வண்ணங்களில் சீருடை மற்றும் கொடி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கேப்டன் உட்பட ஐந்து குழுக்களில் மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து வண்ணங்களில் மகிழ் முற்றம்
மகிழ் முற்றத்தின் பொறுப்பாசிரியராக மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, பட்டதாரி ஆசிரியை சுவர்ணா, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகிழ் முற்றத்தின் பொறுப்பினை ஏற்று துவக்க விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். துவக்க விழாவில், பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய ஐந்து வண்ணங்களில் சீருடை அணிந்த மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அணிவகுத்தனர்.
மாற்றுப்பணியில் பணி புரியும்
ஆசிரியை அசத்தல்
ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை சுவர்ணா, மாற்றுப்பணியில் கக்கதாசம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டு, மகிழ் முற்றம் பொறுப்பினை ஏற்றுள்ளார். அதைத் தொடர்ந்து தனது சொந்த செலவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஐந்து வகையான வண்ணங்களில் சீருடைகளை வழங்கி, துவக்க விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பள்ளி
மேலாண்மை குழு தலைவி மீனாட்சி
மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.