ஓசூர் சுண்ணாம்பு ஜிபி
அங்கன்வாடி மையத்தில்
பாலூட்டும் தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்து பெட்டகம்
மேயர் வழங்கினார்
ஓசூர். நவ. 24. –
by Jothi Ravisugumar
ஊட்டச்சத்தை உறுதி செய்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு சுண்ணாம்பு ஜிபி பகுதி அங்கன்வாடியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை மேயர் எஸ்.ஏ.சத்யா வழங்கினார்.
தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் எடை குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு ஜிபி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊட்டச்சத்து பெட்டகம்
இந்த நிகழ்ச்சியில் மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்து தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசியதாவது,
தமிழக முதல்வர் குழந்தைகளின் வளர்ச்சி, தாய்மார்களின் மனநிலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளார்.
அதன் அடிப்படையில் மருத்துவர்களின் ஆலோசனை பேரில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பெட்டகத்தில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் பிறந்த பச்சிளங் குழந்தை முதல் ஆறு மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர். இதில் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 25 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டசத்து குறைபாடுள்ள 47 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தலா ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.
இதில் கவுன்சிலர் வெங்கடேஷ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் சேகர், கழக நிர்வாகிகள் சரவணன், பன்னீர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்