ஸ்டெதஸ்கோப் (Stethoscope)
கண்டுபிடித்து
மருத்துவ அறிவியலில் மகத்தான
தாக்கத்தை ஏற்படுத்திய
சாதனையாளர்
மருத்துவர். ரெனே லென்னக்
பிப்ரவரி 17. 1781 –
இதயத்துடிப்பு மானியை கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர்
ரெனே லென்னக்
244-வது பிறந்த தினம் –
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 17. -
உலகின் மிகச் சிறந்த மருத்துவர்
என்று போற்றப்படுபவரும் நோய்களைக் கண்டறிய புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தவருமான ரெனே லென்னக் (Rene Laennec) பிறந்த தினம் பிப்ரவரி 17.
பிரான்ஸில் பிறந்தவர். 6 வயதில் தாயை இழந்தார். பாதிரியாரான உறவுக்கார தாத்தா இவரை வளர்த்தார். பிறகு, நான்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிற்றுவித்து வந்த வேறொரு உறவுக்காரர் இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்.
ஆங்கிலம்,
ஜெர்மன்
ஆகிய 2 மொழிகளிலும் சிறந்து விளங்கினார்.
படிப்பிலும் சிறந்த மாணவராக பல பரிசுகளை வென்றார். சிறு வயதிலேயே தன் மாமாவின் வழிகாட்டுதலுடன் மருத்துவம் பயிலத் தொடங்கினார்.
வழக்கறிஞரும், கவிஞருமான அப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மருத்துவப் படிப்பை நிறுத்தினார். கிரேக்க மொழி பயின்று கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1799-ல் மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார்.
அறுவை சிகிச்சையில்
முதல் பரிசு
19 வயதில் பாரிஸ் சென்று ‘எகோலே பிராட்டிக்’ ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் பயின்றார். அங்கு மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான முதல் பரிசை வென்றார். 1802-ல் மாணவராக இருந்தபோதே தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். கல்லீரல் நோய்கள், ரத்தத்தில் காணப்படும் நுண்ணுயிர்கள் குறித்து கட்டுரைகள் வெளியிட்டார்.
மருத்துவ அறிவியல் இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1804-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். உடல்கூறு குறித்து பல மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்.
1808-ல் அத்தெனி மெடிக்கல் (Athenee Medical) என்று அமைப்பை நிறுவினார்.
பிறகு அது சொசைட்டி அகாடமிக் டி பாரிஸ் (Societe Academique de Paris) என்ற பிரபல அமைப்புடன் இணைக்கப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில்
நோய் இயல்,
உடற்கூறு இயல்,
குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.
மருத்துவப் பேராசிரியர்
1816-ல் பாரிஸில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 1822-ல் பிரான்ஸ் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
காசநோய்,
புற்றுநோய்,
குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இவர் கண்டுபிடித்த நோய்களின் பெயர்கள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிப்பு
அந்த நாட்களில் மார்பில் காதை வைத்துதான் இதயத்துடிப்பு சத்தத்தை மருத்துவர்கள் கேட்டனர். பெண்களுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
மாற்றுவழி கண்டுபிடிக்க முடிவு செய்தார் லென்னக்.
குழாய் போன்ற நீண்ட மரத் தண்டுகளை வைத்து குழந்தைகள் பேசி விளையாடுவதைக் கண்டார்.
உடனே மரத்தால் ஆன உருளை வடிவ கருவியை வடிவமைத்தார். பின்னாட்களில் இதை பிரிக்கக்கூடிய மூன்று பகுதிகளால் ஆன கருவியாக மேம்படுத்தினார்.
பிரெஞ்சில் ‘ஸ்டெதஸ்’ என்றால் மார்பு; ‘ஸ்கோப்ஸ்’ என்றால் சோதித்தல். அதனால், தனது கருவிக்கு ‘ஸ்டெதஸ்கோப்’ என்று பெயரிட்டார்.
மருத்துவ அறிவியலில் இவரது கண்டுபிடிப்பு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மருத்துவராக, கண்டுபிடிப்பாளராக மட்டுமின்றி, சமூகத்துக்கு பல நன்மைகளை செய்துவந்தார். பல அறப்பணிகளிலும் ஈடுபட்டுவந்த லென்னக் 45 வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.
---------------------------------------------------.