இந்தியாவில்
அங்கீகரிக்கப்பட்டுள்ள
24 மொழிகளில் சிறந்த இலக்கியத்திற்காக
வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதுகளில் ஒன்று
சாகித்ய அகாடமி விருது.
மார்ச் – 12 - 1954 –
சாகித்ய அகாடமி அமைப்பு
இந்தியஅரசினால்
தொடங்கப்பட்ட தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 12. –
* சாகித்ய அகாடமி அமைப்பு,
இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 1954 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு
உலகலாவிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன், சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது, சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிடுவது, படைப்பாளிகளை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்கிறது.
* சாகித்ய அகாடமி விருது, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும்.
24 மொழிகள்
ஒவ்வோராண்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.
சிறுகதை,
நாவல்,
கவிதை,
இலக்கிய விமர்சனம்,
பயண நூல்,
வாழ்க்கை வரலாறு,
நாடகம்,
சுய சரிதை
உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.
* 1955-ம் ஆண்டு முதன்முதலில் தமிழ் மொழிக்கான விருது,
"தமிழ் இன்பம்"
என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 5000 ரூபாய்.
"பாரதி; காலமும் கருத்தும்"
1983ல், தொ.மு.சிதம்பர ரகுநாதன் எழுதிய "பாரதி; காலமும் கருத்தும்" என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்ட தருணத்தில் இத்தொகை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
"வாழும் வள்ளுவம்"
1988ல் வா.செ.குழந்தைச்சாமி எழுதிய "வாழும் வள்ளுவம்" என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது 25 ஆயிரமாக பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டது.
சுதந்திர தாகம்
2001ல் சி.சு.செல்லப்பாவின் "சுதந்திர தாகம்" நாவலுக்கு விருது வழங்கப்பட்ட தருணத்தில் 40 ஆயிரமாக உயர்ந்தது.
“கள்ளிக்காட்டு இதிகாசம்”
2003-ம் ஆண்டில் "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்பட்ட போது 40 ஆயிரமானது. 2009 முதல் 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
கூடவே ஒரு பட்டயம்.
* ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்ய, சாகித்ய அகாடமி நிர்வாகம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி குழுவை அமைக்கும்.
அக்குழு குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும். ஒவ்வொரு கருத்தாளரும் இரண்டு நூல்களை பரிந்துரை செய்வார்கள்.
அவ்விதம் பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு, ஒரு நூலை ஏகமனதாக தேர்வு செய்யும்.
அந்த ஆண்டில் சிறந்த நூல்கள் ஏதும் வரவில்லை என்று கருதினால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* சாகித்ய அகாடமி விருதுகளை தென்மாவட்டங்களில் பிறந்த எழுத்தாளர்களே அதிக அளவில் பெற்றுள்ளார்கள்.
திருநெல்வேலி
குறிப்பாக திருநெல்வேலி வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அதிக அளவில் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற தென்மாவட்ட எழுத்தாளர்கள்;
சு.வெங்கடேசன் (மதுரை),
அ.மாதவன் (செங்கோட்டை),
ஜோ.டி.குரூஸ் (உவரி),
மேலாண்மை பொன்னுச்சாமி (விருதுநகர்),
நீல பத்மநாபன் (இரணியல்),
தி.க.சிவசங்கரன் (திருநெல்வேலி),
தோப்பில் முகமது மீரான் (தேங்காய்ப்பட்டினம்),
பொன்னீலன் (நாகர்கோவில்),
வல்லிக்கண்ணன் (திருநெல்வேலி),
மீ.ப.சோமு (மீனாட்சிபுரம்),
பி.ஸ்ரீ. ஆச்சார்யா (தென் திருப்பேரை),
அழகிரிசாமி (இடைச்செவல்),
நா.பார்த்தசாரதி (சிவகாசி),
தொ.மு.சி.ரகுநாதன் (திருநெல்வேலி),
ஆதவன் (கல்லிடைக்குறிச்சி),
சு.சமுத்திரம் (திருநெல்வேலி),
கி.ராஜநாராயணன் (கோவில்பட்டி),
சி.சு.செல்லப்பா (சின்னமனூர்),
கவிஞர் வைரமுத்து (தேனி),
மு.மேத்தா (பெரியகுளம்),
நாஞ்சில்நாடன் (வீர நாராணமங்கலம்),
பூமணி (தூத்துக்குடி),
டி.செல்வராஜ் (தென்கலம்),
வண்ணதாசன் (திருநெல்வேலி).
சிறுபான்மையினர்
பேசும் மொழிகளில் வெளிவரும்
சிறந்த நூல்கள்,
சிறந்த படைப்பாளர்களைத்
தேர்வு செய்து
பாஷா சம்மான்
என்ற விருதையும்
சாகித்ய அகாடமி
வழங்குகிறது.
1 லட்சம் பரிசுடன் கூடிய இந்த விருது சௌராஷ்டிர மொழி மேம்பாட்டுக்கு பாடுபட்ட
கே.ஆர்.சேதுராமன்,
தடா.சுப்பிரமணியம்
இருவருக்கும் 2006ல்
வழங்கப்பட்டது.
இதுதவிர
மொழி பெயர்ப்புக்கென
ஒரு விருது,
குழந்தை இலக்கியத்துக்கான
பால சாகித்ய அகாடமி விருது,
35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான
யுவபுரஸ்கார் விருது
போன்ற விருதுகளையும்
சாகித்ய அகாடமி
வழங்குகிறது.
இம்மூன்று விருதுகளும்
50 ஆயிரம் பரிசுத்தொகையையும், பட்டயங்களையும்
உள்ளடக்கியதாகும்.
-------------------------------------------.