ஓசூர் முனீஸ்வர் நகரில் ரூ.9.50 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜை
ஓசூர். நவ. 13 –
Jothi Ravisugumar
ஓசூர் முனீஸ்வர் நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.50லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஒய். பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு முனீஸ்வர் நகரில் சீனிவாசா கார்டன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 14 ஆண்டுகளாக சாலை வசதியின்றி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து புதிய சிமெண்ட் சாலை அமைக்க 2024-25-ம் ஆண்டு, சட்டபேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி முனீஸ்வர் நகரில் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணைமேயர் ஆனந்தய்யா, 22-வது வார்டு கவுன்சிலரும், பொதுசுகாதார குழு தலைவருமான என்.எஸ். மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமை வகித்து பூமி பூஜை செய்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 22-வது வார்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, கவுன்சிலர் வெங்கடேஷ், குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், திமுக நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.