கணிதம்,
இயற்பியல்,
வானியல்,
புவியியல்
உள்ளிட்ட களங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்
ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ்
ஏப்ரல்- 30 - 1777
ஜெர்மன் கணிதவியலாளர், வானியலாளரான ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ்
248 -வது பிறந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 30. –
பிறவி மேதை
ஜெர்மனியில் பிரன்ஸ்விக் நகரில் (1777) பிறந்தார். தாங்கள் படிக்கா விட்டாலும், பிள்ளை நன்கு படிக்க வேண்டும் என்று விரும்பினர் பெற்றோர்.
அதற்கேற்ப, பிறவி மேதையாகத் திகழ்ந்தார். தொழிலாளியான தந்தை தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரும்போது, கணக்கில் தவறு செய்ததை 3 வயதில் கண்டுபிடித்தவர்.
இவருக்கு 7 வயது இருக்கும்போது, வகுப்பில் மாணவர்களை அமைதிப்படுத்த கடினமான கணக்கு ஒன்றைக் கொடுத்து போடச் சொன்னார் ஆசிரியர்.
கண்மூடி திறப்பதற்குள் அதைப் போட்டு முடித்து ஆசிரியரை அசரவைத்தார்.
தொன்மையான இலக்கியங்களில் ஆர்வம் இருந்தாலும்,
கணிதம்தான் தன் எதிர்காலம் என தீர்மானித்தார்.
ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டார்.
நியூட்டன் உட்பட பல மேதைகளின் நூல்களை ஆழ்ந்து கற்றார்.
கணித நூல்களில் உள்ள பிழைகளைக் கண்டறியும் அளவுக்கு 12 வயதிலேயே திறன் பெற்றிருந்தார்.
இவரது கணித ஆற்றல் பற்றி கேள்விப்பட்ட ஃபெர்டினான்ட் பிரபு இவருக்கு உதவித்தொகை வழங்கி மேற்கொண்டு படிக்க உதவினார்.
பிரபலமான கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பகா எண்களை ஆராய்ந்து அதில் ஏராளமான சமன்பாடுகளைக் கண்டறிந்து சோதித்தார்.
குறுகிய காலத்துக்குள் ஜெர்மனியின் முக்கிய கணிதவியலாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
1799-ல் தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையில் அல்ஜீப்ராவின் அடிப்படைத் தேற்றத்தை நிரூபித்தார்.
கணிதத்தின் அனைத்து களங்களிலும் பங்களிப்புகளை வழங்கியிருந்தாலும் ‘எண்கோட்பாடு’தான் இவருக்கு மிகவும் பிடித்தது.
‘டிஸ்கொசிஷனஸ் அரித்மேடிசி’
என்ற நூலை 1801-ல் வெளியிட்டார்.
இந்த நூல் இதுவரை எழுதப்பட்ட கணித நூல்களிலேயே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
எண் கோட்பாடு,
பகுவியல்,
வகையீட்டு வடிவியலில்
ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல நூல்களை எழுதினார்.
300-க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார். பெரும்பாலும் லத்தீன் மொழியிலேயே எழுதினார்.
காந்தமானி
கோட்பாட்டு வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சிறு கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கணக்கிட்டுக் கூறினார்.
பூமியின் காந்தவியல் பண்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.
இந்த ஆராய்ச்சிகளின்போது காந்தமானியைக் கண்டறிந்தார்.
இது மட்டுமல்லாது
வானியல்,
புவியியல்,
மின்காந்தவியல்,
இயக்கவியல்,
ஒளியியல்,
தொடர்பான பல்வேறு கருவிகள்,
அறிவியல் உபகரணங்களையும் கண்டறிந்தார்.
ரஷ்ய மொழி உட்பட பல மொழிகளை அறிந்திருந்தார்.
1807-ல் கோட்டிங்கன் வானியல் கண்காணிப்பு மையத்தின் இயக்குநராகவும், அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும்
நியமிக்கப்பட்டார்.
பிரான்ஸ், டென்மார்க், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் அறிவியல், கணித அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் இவருக்கு பல பரிசுகள், கவுரவங்களை வழங்கின.
கணிதம்,
இயற்பியல்,
வானியல்,
புவியியல்
உள்ளிட்ட களங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஜோஹன் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் 78-வது வயதில் (1855) மறைந்தார்.
சர்வதேச கணித ஒன்றியம்,
ஜெர்மன் கணித சங்கம்
ஆகியவை 2006-ல் இவரது பெயரில் விருது ஒன்றை நிறுவி ஆண்டுதோறும் கணித சாதனையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
----------------------------------.