காசநோய் - ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அப்படிக் கண்டுபிடித்துவிட்டால் ஆறு மாதங்களில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு காசநோயை குணப்படுத்திவிடலாம்.
மார்ச்- 24 - உலக காசநோய்
விழிப்புணர்வு நாள்
world tuberculosis
awareness day 2025 theme
“Yes! We Can End TB:
Commit, Invest, Deliver” “
ஆம்! காசநோயை நாம் முடிவுக்குக் கொண்டுவர முடியும்:
உறுதியளிக்கவும், முதலீடு செய்யவும், வழங்கவும்”.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 24. –
டி.பி. எனப்படும் காசநோய்
ஒரு காலத்தில் உயிர்க்கொல்லி
நோயாக இருந்தது.
இன்றும் கூட அச்சுறுத்தக்கூடிய நோய்தான்.
ஏழை நாடுகளில் இந்த நோயின்
தாக்கம் மிகவும் அதிகம்.
குறிப்பாக இந்தியாவில்
இந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்கள்
மிக அதிகம். அது என்ன நோய் என ஊகிக்க முடிகிறதா?
டி.பி. எனப்படும் காசநோய்தான்.
மிகச் சுலபமாகப் பரவும் ஆபத்து கொண்ட இந்த நோய், பாதிக்கப்பட்டவர்களை உருக்குலைத்துவிடக்கூடியது.
இந்தியாவில் அதிகம்
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில்
22 லட்சம் பேருக்குக் காசநோய் வருகிறது.
ஆனால், உலக அளவில் 90 லட்சம் பேருக்கு இந்நோய் வருகிறது. உலகில் நான்கு பேருக்குக் காசநோய் வந்தால், அதில் ஒருவர் இந்தியர் என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் காசநோய் பற்றிய புள்ளிவிவரம்.
இந்த நோய் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த என்ன காரணம்? மக்கள்தொகைதான் மிகப்பெரிய காரணம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
“உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 சதவீதம்.
ஆனால், காசநோய் மட்டும் 25 சதவீதம் பேருக்கு இந்தியாவில் வருகிறது. குறிப்பாக ஏழை எளிய
மக்களுக்குத்தான் இந்த நோய்
அதிகம் வருகிறது.
காற்று மூலம் பரவும்
காற்று மூலமே இந்த நோய் பரவுகிறது.
சுகாதாரமின்மை,
காற்றோட்ட வசதி இல்லாதது,
மது வகைகள்,
சிகரெட் பிடிப்பது,
போன்ற பல்வேறு காரணிகள் இந்த நோய் ஏற்படக் காரணமாக இருக்கின்றன.
இந்தியாவில் இந்தக் காரணிகள்
அதிகம் என்பதால் காசநோயின்
பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது”
யாருக்கு நோய் வருகிறது?
டியூபர்செல் பாசிலஸ்
அல்லது
டியூபர் குளோசிஸ்
என்பதன் சுருக்கம்தான்
டி.பி.
பாதிக்கப்பட்டவர் இருமும்போதும், சளியை வெளியில் துப்புவதன் மூலமே மற்றவர்களுக்குக் காற்று மூலம் இந்த நோய் பரவுகிறது.
வீட்டில் காசநோயாளி இருந்தால்
இந்த நோய் குழந்தைகளுக்கு
எளிதில் பரவிவிடுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்குக்
காசநோய் எளிதில் தொற்றிக் கொள்ளலாம்.
குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் தொற்றிவிடுகிறது.
இன்னும் யார் யாருக்கெல்லாம்
இந்த நோய் எளிதில்
தொற்றும் வாய்ப்பு அதிகம்?
ஹெச்.ஐ.வி. உள்ளவர்களுக்கு
அடிப்படை பிரச்சினையே நோய் எதிர்ப்பு சக்தியை இழப்பதுதான். எனவே, அவர்களுக்கு இந்த நோய் எளிதில் தொற்றிவிடுகிறது.
அதேபோல
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்,
நுரையீரலில் பிரச்சினை உள்ளவர்கள்,
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகவே இருக்கும்.
இவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பு உண்டு.
நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும் என்பதால் அவர்களையும் காசநோய் தீண்டலாம்”
அறிகுறிகள் - பரிசோதனை
பொதுவாக ஒருவருக்குக்
காசநோய் இருக்கிறதா
என்பதை எப்படி அறிவது?
தொடர்ந்து
இருமல்,
சளியுடன் ரத்தம் வருவது,
காய்ச்சல்,
இரவில் குளிர் நடுக்கம்,
நெஞ்சில் வலி,
இரவில் அதிகம் வியர்ப்பது,
ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு காசநோய் இருக்கிறதா என்பதைச் சளியை எடுத்துப் பரிசோதிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.
சளியை ஸ்கேன் செய்து
‘கிளியர் மைக்ரோஸ்கோப்பி’
மூலம் சளியைப் பார்க்கும்போது கிருமிகள் அதிகம் இருந்தால் காசநோய் என்ற முடிவுக்கு வருவது வழக்கம். ஆனாலும், இதில் 100 பேருக்குப் பரிசோதனை செய்தால் 50 பேருக்கு மட்டுமே உறுதிப்படுத்தமுடிகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஜீன் எக்ஸ்பர்ட்
“இப்போது காசநோயை
கண்டுபிடிக்க ‘ஜீன் எக்ஸ்பர்ட்’
என்ற கருவி வந்திருக்கிறது.
இந்தியாவில் இந்தக் கருவி
100 இடங்களில் உள்ளன.
சென்னையில் உள்ள காசநோய்
ஆராய்ச்சி மையத்தில் இரண்டு கருவிகளும், அரசு மருத்துவமனையில் இரண்டு கருவிகளும், கோவை, மதுரை, வேலூரிலும் இந்த கருவிகள் உள்ளன.
இதன்மூலம் பரிசோதிக்கும்போது 75 சதவீதம் காசநோயை உறுதிபடுத்த முடிகிறது. காச நோய் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது”.
தீவிர நிலை
காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அப்படிக் கண்டுபிடித்துவிட்டால் ஆறு மாதங்களில் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு நோயைக் குணப்படுத்திவிடலாம்.
காசநோயில் மரணம் ஏற்படுத்துவது
‘மல்டி டிரக் ரெசிஸ்டன்ஸ்’
(எம்.டி.ஆர்.-டி.பி.)
என்ற நிலையில்தான்.
காசநோய் வந்து சரியாக மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதது போன்ற காரணங்களால் இந்த நிலைக்குச் செல்பவர்கள் உண்டு. இந்த நிலைக்கு வருபவர்கள்தான் மரணத்தைத் தழுவ நேரிடுகிறது.
ஹெச்.ஐ.வி. பாதித்தவர்கள்,
நீரிழிவு நோய்,
நுரையீரல்,
கல்லீரல்,
சிறுநீரகப் பிரச்சினை,
ஊட்டசத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு காசநோய் வந்தால்,
இந்த நிலையில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.
எம்.டி.ஆர்.-டி.பி. நிலையில்
உள்ளவர்கள் மூலம் காசநோய் பரவினால் மற்றவர்களுக்கும் அது எம்.டி.ஆர்.-டி.பி.யாகத்தான் இருக்கும்.
எனவேதான்,
காச நோய் உள்ளவர்கள்
இருமும்போது, வாயில் துணியை வைத்து மூடிக்கொள்ள வேண்டும்
என்று வற்புறுத்துகிறோம்.
இந்த நிலையில்
காச நோய்
உள்ளவர்கள்
2 ஆண்டுகளுக்கு
மருந்து சாப்பிட வேண்டும்.
ஆறு மாதங்கள் ஊசி
போட்டுக்கொள்ள வேண்டும்”
தடுப்பு முறை
காசநோயாளிகளை
காற்றோட்டமுள்ள அறையில்
தங்க வைப்பதன் மூலம்
அவர்களிடம் இருந்து வெளிப்படும் பாக்டீரியா வெளியே சென்றுவிடும்.
எனவே, வீட்டில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
மற்றப்படி காச நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தலாம்.
அவர்களைத் தனிமைப்படுத்த தேவையில்லை.
குழந்தைகளுக்கு
இந்த நோய் வருவதைத் தடுக்க
என்ன செய்ய வேண்டும்?
“குழந்தைகளுக்கு காசநோய்
வராமல் தடுக்க
2 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு பி.சி.ஜி.
தடுப்பூசி போட வேண்டும்.
ஆனால் இந்த ஊசியும் முழுமையாகத் தடுப்பது இல்லை.
50 - 60 சதவீதமே தடுக்கிறது என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்
பட்டிருக்கிறது.
இன்னும் அதிகம் தடுக்கும்
வகையிலான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வு
நடந்துவருகிறது.
காசநோயாளிகள் உள்ள வீட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பு மருந்து சாப்பிட வேண்டும்”
----------------------------------------.