நம் பூமியின் மீது...
மோதும் வாய்ப்புள்ளவை என
இன்றளவும், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்கற்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
ஆயினும், நாம் இதுவரை அவற்றில் வெறும் 1% மட்டுமே கண்டறிந்துள்ளோம்.
ஜூன் – 30 –
உலக விண்கற்கள் தினம்
(Asteroid Day)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜூன். 30. –
விண்கற்கள் என்றால் என்ன?
விண்கற்கள் அல்லது குறுங்கோள்கள் (Asteroids) என்பது, சூரியக் குடும்பத்தின் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து, சூரியனைச் சுற்றிவரும், சுமார் 10 மீட்டர் முதல், சில நூறு கி.மீட்டர்கள் அளவு குறுக்களவு கொண்ட, லட்சக்கணக்கான மிகச் சிறிய உருவிலான வான்பொருட்கள் ஆகும்.
அவை எங்குள்ளன?
மிகப் பெரும்பான்மையான விண்கற்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள விண்கற்கள் பட்டை (Asteroids belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. சில விண்கற்களுக்கு நிலாக்களும்கூட இருக்கின்றன.
சில குறுங்கோள்கள், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகிலும் அமைந்துள்ளன. அவை, அபோஹெலே ( Aphohele ) என அழைக்கப்படுகின்றன.
இன்னும் சில குறுங்கோள்கள், வியாழனின் சுற்றுவட்டப் பாதையை ஒட்டி, அதற்கு முன்னும், பின்னும் கூட அமைந்துள்ளன. அவை, ட்ரோஜான்கள் ( Trojans ) எனப்படுகின்றன.
இவை தவிர, வியாழனுக்கு வெளியே அமையும் சிறப்புவகை குறுங்கோள்களும் உண்டு. அவை, டாமோக்ளாய்டு ( Damocloid ), சென்டார்ஸ் ( Centaurs ) எனப்படுகின்றன.
விண்கற்கள் எவ்வாறு கண்டறியப்பட்டன?
டைட்டஸ் - போட் (Titus - Bode) விதியின்படி, கி.பி. 1781-ல் சனி கோளுக்கு அப்பால், யுரேனஸ் எனும் கோள் கண்டறியப்பட்டப் பிறகு, செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவில், நிச்சயம் ஏதேனும் கோள் இருக்க வேண்டும் என்று, அப்பகுதியை வான் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அப்போதுதான், 1801-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி, ஜியோசெப் பியாஸி (Giuseppe Piazzi) என்பார், Ceres என்னும் வான்பொருளைக் கண்டார்...
அதனைத் தொடர்ந்து, 1802-ல் பல்லாஸ் (Pallas), 1804-ல் ஜூனோ (Juno), 1807-ல் வெஸ்தா (Vesta) எனத் தொடர்ச்சியாக... கி. பி. 1868 -ற்குள் 100-க்கும் மேற்பட்ட ஏராளமான விண்பொருட்கள், அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
அஸ்டிராய்டுகள் என ஏன் அவை அழைக்கப்பட்டன?
அவை, சூரியனைச் சுற்றி வருவதால், அவற்றைக் கோளாகத்தான் மதிக்கவேண்டும் என்ற கருத்து நிலவினாலும், அவை மிக மிகச் சிறியனவாக, விண்மீன்களைப் போலவே புள்ளியாகத் தெரிவதால், அவற்றுக்கு,
"விண்மீன்களைப் போன்ற சிறிய வான்பொருட்கள்" (Aster = Star)
என்று பொருள்படும்வண்ணம்,
அஸ்டிராய்டுகள் (Asteroids)
என்ற பெயர் இடப்பட்டது.
யுரேனஸ் கோளைக் கண்டறிந்த வில்லியம் ஹெர்ஷல் தான், அவற்றிற்கு அஸ்டிராய்டுகள் எனப் பெயரிட்டார்.
குறுங்கோள்களின் வகைகள் :
அவற்றின் (Composition) பொருள் இயைபை வைத்து... குறுங்கோள்களை மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன:
C வகை (Chondrite),
M வகை (Metallic), மற்றும்
S (Stony /Silicate) வகை.
C வகை : கரிமம் செறிந்ததாகும்.
M வகை : உலோகம் செறிந்ததாகும்.
S வகை : சிலிகேட் எனும் மணற்தாது செறிந்ததாகும்.
அவற்றின் இருப்பிடத்தைப் பொறுத்து,
அ) முதன்மைப் பட்டை குறுங்கோள்கள் (Main Belt Asteroids)
ஆ) ட்ரோஜான் வகை குறுங்கோள்கள் (Trojans)
இ) புவி அருகு குறுங்கோள்கள் (Near Earth Asteroids)
என்றும் குறுங்கோள்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
உலக குறுங்கோள்கள் / விண்கற்கள் தினம் ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது?
1908, ஜூன் 30-ம் தேதி காலை 7:17 மணியளவில், ரஷ்ய நாட்டின், போட்கமென்னேயா - துங்குஸ்கா பகுதியில், தரையில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் உயரத்தில், 200 அடி குறுக்களவு கொண்ட விண்கல் ஒன்று, மணிக்கு சுமார் ஒரு லட்சம் கி.மீட்டர் வேகத்தில், வெடித்துச் சிதறியதில், அப்பகுதியின் சுமார் 2,150 சதுர கி.மீ பரப்பில் இருந்த, 8 கோடி மரங்கள், நொடிப்பொழுதில், வெந்து கருகிப் போயின.
6.5 கோடி ஆண்டுகட்கு முன்பு, இவ்வாறான ஒரு விண்கல் மோதலால் தான், இப்புவியில் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினங்களான
டைனோசர்
உள்ளிட்ட பெரும்பாலான உயிரினங்களும் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றளவும், சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்கற்கள், நம் பூமியின் மீது மோதும் வாய்ப்புள்ளவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன. ஆயினும், நாம் இதுவரை அவற்றில் வெறும் 1% மட்டுமே கண்டறிந்துள்ளோம்.
எனவே, அனைத்து நாடுகளிலும் உள்ள, மாணவர்கள், பொதுமக்களிடம் விண்கற்களைப் பற்றிய அறிவியல்பூர்வமான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும்,
ஜூன் 30 ஆம் நாளை,
"உலக விண்கற்கள் நாளாக"
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
---------------------------------------------.