ஜோதி தமிழ்
இணையஇதழ்
ஆன்மிகம் 002
ஆன்மிகம் 002
மத்திகிரியில்
புனித ஆரோக்கிய அன்னை
பாரம்பரிய ஆலயத்தில்
நூற்றாண்டு விழா
தருமபுரி ஆயர் பங்கேற்பு
ஓசூர். நவ. 23 –
by Jothi Ravisugumar
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரி குதிரைப்பாளையத்தில் வரலாற்று சிறப்புமிக்க புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மத்திகிரி ஆலய வரலாறு(1924 – 2024)
1784-ம் ஆண்டுக்கு முன்னரே மத்திகிரியில் சிற்றாலயமும், கல்லறைகளும் இருந்ததாக அருள்தந்தை டெஃபினி குறிப்பிடுகிறார். மத்திகிரியில் முதல் ஆலயம் 1840-ல் கட்டப்பட்டது.(அருள்தந்தை ஜான் மாந்தடம், 1837-ம் ஆண்டு என குறிப்பிடுகிறார்). அதனை தொடர்ந்து பழைய ஆலயத்தின் அடித்தளத்தின் மீது 1924-ம் ஆண்டு தற்போதுள்ள பாரம்பரிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
மைசூர் – புதுச்சேரியுடன் தொடர்பு
இந்த பாரம்பரிய ஆலயம் ஆரம்ப காலத்தில் மைசூர், புதுத்சேரியுடன் இணைந்து மறை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
1847-ல் மைசூர் மறைபணித் தளத்தோடும், பின்னர் 1850-ம் ஆண்டு முதல் 1858 வரை புதுச்சேரி மறைபணித் தளத்தோடும், பின்னர் மீண்டும் 1858-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை மைசூர் மறை மாவட்டத்தோடும் மத்திகிரி இருந்துள்ளது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை
1875-ம் ஆண்டு முதல் 1909 வரையுள்ள திருமுழுக்கு பதிவேட்டில் ஓசூர், ஒன்னல்வாடி, சென்னாத்தூர், தேன்கனிக்கோட்டை, தண்டரை, மதகொண்டப்பள்ளி, சொல்லேபுரம், பாரந்தூர், நாகசந்திரம், பெலகேரி, கோபசந்திரம், நல்லசந்திரம், பௌகொண்டப்பள்ளி, தாசரப்பள்ளி, கெம்பத்பள்ளி, கொட்டானூர், மரதனப்பள்ளி, பிலிகுண்டு, ஆனேக்கல், அகொண்டப்பள்ளி, எடப்பள்ளி ஆகிய ஊர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இக்காலகட்டத்தில் இன்றைய தேன்கனிக்கோட்டை, ஓசூர் மறை வட்டங்களிலுள்ள பங்குகள் அனைத்தும் மத்திகிரியின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஆலயம்
இந்த வரலாற்று சிறப்புமிக்க பழைய ஆலயம்,
2016-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதியன்று மறைமாவட்ட பாரம்பரிய ஆலயமாக தருமபுரி மறைமாவட்ட ஆயரால் அறிவிக்கப்பட்டது.
நூற்றாண்டு தொடக்கவிழா
இந்த பாரம்பரிய ஆலயம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, 2023-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ம் தேதி நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி ஆரடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையுடன் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் பாரம்பரிய ஆலயத்தை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி பாரம்பரிய ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு விழா
இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா நவம்பர் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் கூட்டு நன்றி திருவிழா திருப்பலி நடைபெற்றது.
பைபிள் வினா விடை போட்டி
விழா தொடக்கத்தில் மறைமாவட்ட ஆயர் அவர்கள், பைபிள் வினாவிடை போட்டி நடத்தி, வெற்றி பெற்ற பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் குழந்தைகள் மாதா வேடமணிந்து பங்கேற்றனர். நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழாவில் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் எக்ஸ்.ஜோசப், கரோலின் ஜோசப் ஆகியோர் சார்பில் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்பின் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், தெற்கு பகுதி கழக துணை செயலாளருமான எஸ்.வி.எஸ்.சந்திரன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் டி. கிருஷ்ணன், சாக்கப்பா, அதிமுக வட்ட துணை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தேர் பவனி
தொடர்ந்து மாலை 6 மணிக்கு பாரம்பரிய ஆலயம் முதல் புதிய ஆலயம் வரை நடந்த தேர் பவனியை ஓசூர் வட்டார முதன்மை குரு பெரியநாயகம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மறைமாவட்ட குருக்கள், முன்னாள் பங்கு தந்தையர்கள், பங்கு தந்தை கிறிஸ்டோபர், அருட்பணியாளர் ராயப்பர், அருட்கன்னியர்கள் மற்றும் திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு பாரம்பரிய ஆலயம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.