மாயாஜால கதைகள்,
கலக்கலான காமிக்ஸ்,
அறிவியல் உண்மைகள்,
வரலாற்று நிகழ்வுகள்,
விளையாட்டுப் புதிர்கள்
எனக் குழந்தைகளுக்கான அத்தனை தளங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய
சாதனையாளர்
தமிழ்ச் சிறார் எழுத்தாளர்
வாண்டு மாமா
ஏப்ரல் 21, 1925 –
வாண்டுமாமா என்கிற வி.கிருஷ்ணமூர்த்தி
100 – வது பிறந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 21. -
''நிறையப் பேர் என்னைச் சிறந்த சிறுவர் எழுத்தாளர்னு சொல்றாங்க. ஆனால், என்னை ஒரு சமையல்காரனா நினைக்கிறேன். எல்லோரும்தான் சமைக்கிறாங்க. ஒரு சிலருக்கு சரியான கைப்பக்குவம் வந்துடும். அப்படி எனக்கு குழந்தைப் படைப்புகளுக்கான கைப்பக்குவம் வந்துடுச்சு அவ்வளவுதான்'’
மாயாஜால கதைகள்,
கலக்கலான காமிக்ஸ்,
அறிவியல் உண்மைகள்,
வரலாற்று நிகழ்வுகள்,
விளையாட்டுப் புதிர்கள்
எனக் குழந்தைகளுக்கான அத்தனை தளங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, கிட்டதட்ட மூன்று தலைமுறை சிறார்களின் வாசிப்பு உலகைக் குதூகலப்படுத்திய ஒரு தமிழ்ச் சிறார் எழுத்தாளர் சொன்ன அடக்கமான வரிகள் இவை.
அவர்தான், வாண்டுமாமா என்கிற வி.கிருஷ்ணமூர்த்தி.
அவரது பிறந்தநாள் இன்று.
ஏப்ரல் 21, 1925-ம் ஆண்டு புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமழம் என்ற ஊரில் பிறந்தவர் வி.கிருஷ்ணமூர்த்தி.
சின்ன வயதிலேயே ஓவியங்கள்
வரைவதில் அவ்வளவு ஆர்வம்.
பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வியந்து பாராட்டும் வகையில் வரைந்து தள்ளுவார்.
பத்திரிகைகளில் வரும் கதைகளுக்கான ஓவியங்களைப் பார்த்து அதேபோல வரைவார்.
கதைகள் எழுதும் ஆர்வமும் ஏற்பட, பேனாவைப் பிடித்தார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, கல்லூரிக்குச் செல்லும் வசதி இல்லை. திருச்சியில் இருந்தவாறு விளம்பர ஓவியங்கள், அட்டைப் படங்கள் வரைந்துகொண்டிருந்தார்.
பத்திரிகை துறையில் சேர்ந்து, பெரிய ஓவியராகிவிட வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம்.
கார்ட்டூனிஸ்ட் மாலி
அப்போது, ஆனந்த விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்த மாலி அவர்களைத் தெரிந்தவர் மூலம் சந்தித்தார்.
விகடனில் லெட்டரிங் ஆர்ட்டிஸ்டாக சிறிது காலம் பணியாற்றியவர்,
மீண்டும் திருச்சிக்குச் சென்றார்.
அங்கே இருந்து வெளியான
'சிவாஜி'
என்ற பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.
கெளசிகன் என்கிற பெயரில் பெரியவர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தவரை, சிறுவர்களுக்காக எழுதத் தூண்டியதுடன்,
'வாண்டுமாமா'
என்ற பெயரையும் வைத்தார், ஓவியர் மாலி.
அதன் பிறகு
'வானவில்',
'கிண்கிணி',
'கோகுலம்'
என இவரது வாழ்க்கைப் பாதை,
சிறுவர் பத்திரிகைகளில் பயணிக்க ஆரம்பித்தது.
தனது மந்திர எழுத்துகளால் தமிழ்ச் சிறார்களை கட்டிப்போட்டார் வாண்டுமாமா.
சில வருடங்களுக்கு முன்பு,
'ஹாரி பாட்டர்'
புத்தகம் வெளியாகும் நாட்களில் புத்தகக் கடைகளில் மிகப் பெரிய வரிசை நிற்பதை வியப்போடு பார்த்திருக்கிறோம்.
ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் அத்தகைய அதிசயத்தை நிகழ்த்தியவர் வாண்டுமாமா.
அவர் பொறுப்பேற்று இருந்த
'வானவில்'
சிறுவர் பத்திரிகையை
வாங்குவதற்காக,
வெளியாகும் நாளில்
திருச்சியில் இருக்கும்
அந்தப் பத்திரிகை அச்சகத்துக்கே விடியற்காலையில் சென்று சிறுவர்கள் வரிசை கட்டுவார்கள்.
தமிழில்
'காமிக்ஸ்'
என்கிற விஷயத்தில், புதுமைகளைப் புகுத்தி ஹிட்டாக்கியவர் இவர்தான்.
இன்றைய சோட்டா பீம், பென் 10 போன்றவற்றுக்கெல்லாம் முன்னோடிகளைத் தந்தவர் வாண்டுமாமா.
பலே பாலு,
குஷிவாலி ஹரிஷ்,
அண்ணாசாமி,
சமத்து சாரு
எனப் பல ஜாலி கேரக்டர்களை உருவாக்கி, 'நச்' என ஒன்று, இரண்டுப் பக்கங்களில் நகைச்சுவை படக் கதைகளை உருவாக்கியவர்.
ஓநாய் கோட்டை,
மர்ம மனிதன்,
பவழத் தீவு,
சிலையைத் தேடி,
திகில் தோட்டம்,
வீர விஜயன்
என ஓவியர் செல்லம் அவர்களுடன் இணைந்து இவர் படைத்த காமிக்ஸ் கதைகளை இன்றைய ஆன்ட்ராய்டு தலைமுறை குழந்தைகளும்
ஆர்வத்துடன் படிக்கும்
வகையில் இருக்கும்.
திருக்குறளுக்குப் பொருள்
அறிவதற்கும் இன்று கூகுளில் தேடுகிறோம். எல்லாவற்றையும் விரல்களால் தட்டி நிமிடங்களில் தெரிந்துகொள்கிறோம்.
ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே,
'மருத்துவம் பிறந்த கதை',
'உலகத்தின் கதை',
'விஞ்ஞான வித்தைகள்'
'அறிவியல் சோதனைகள்'
எனப் பல்வேறு தலைப்புகளில் சிறார்களுக்காக எளிமையாகவும்
மிகத் தெளிவாகவும் எழுதியவர் வாண்டுமாமா.
இதற்கான தகவல்களை எல்லாம் திரட்டியதில் கடுமையான உழைப்பு இருந்தது.
எந்த அளவுக்கு எழுதினாரோ, அதற்குப் பல மடங்கு படித்தவர் அவர்.
'பூந்தளிர்'
என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அலுவலகத்தில் இரண்டு பீரோக்கள் நிறையப் புத்தகங்களை வைத்திருந்தார். எல்லாமே அறிவியல், பொது அறிவு சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள். தேடித் தேடி வாங்கி, தமிழ் சிறுவர் உலகுக்கு அளித்தார்.
மொத்தமாக 160 புத்தகங்கள்
அவற்றில் 100 புத்தகங்கள் வரை சிறார்களுக்கானது.
(இவற்றில் பெரும்பாலானவற்றை
'வானதி பதிப்பகம்'
வெளியிட்டுள்ளது).
தனது 90-வது வயதில்
இறக்கும் வரையில் (ஜூன் 12, 2015), குழந்தைகளுக்காகவே சிந்தித்தவரை நினைத்துப் பார்ப்பதும், அவரது புத்தகங்களை இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதும் அவரது பிறந்தநாளுக்குச் செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
--------------------------------------------.