ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
hosur Corp - Health Meeting 001
Editor - Jothi Ravisugumar,M.A.
Editor - Jothi Ravisugumar,M.A.
ஓசூர் மாநகராட்சி
பொது சுகாதார குழு கூட்டம்
தனியார் ரத்த வங்கிகளில்
கூடுதல் தொகை வசூல்
பொது சுகாதார குழு தலைவர்
குற்றச்சாட்டு
ஓசூர். டிச. 12. –
ஓசூர் மாநகராட்சியில் நடந்த பொது சுகாதார குழு கூட்டத்தில் தனியார் ரத்த வங்கிகளில் கூடுதல் தொகை வசூல் செய்வதாக மாநகர பொது சுகாதார
குழு தலைவர் மாதேஸ்வரன் குற்றச்சாட்டு கூறினார்.
பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அரங்கில் பொது சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த்,
மாநகர அலுவலர் அஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அபராதம்
இந்த கூட்டத்தில் தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அபராதம்
விதிக்க வேண்டும். குடோன்களை கண்காணித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தாலே
பெருமளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கலாம்.
பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு
அடைத்து விற்பனை
புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு
ஓட்டல்களில் சூடாக உணவுப் பொருட்களை அடைத்து மக்களுக்கு விற்பனை செய்வதால்,
புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகிறது. அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும்.
தெருநாய்களுக்கு கருத்தடை -
வெறிநாய் தடுப்பூசி பணி தீவிரம்
தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக
பொதுமக்கள் புகார் கூறி வருவதால், அவற்றை
பிடித்து கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து,
வெறி நாய் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
சாலைகளில் நடமாடும் மாடுகள்
உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்
சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மாடுகளை பிடித்து அதன்
உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்படும் மாடுகளை கட்டி வைக்க கொட்டகை அமைத்து அதற்கான தீவன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
திருவிழா சமயங்களில் பயன்படுத்த
மொபைல் டாய்லெட்
திருவிழா சமயங்களில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக இரு மொபைல் டாய்லெட் வாங்க வேண்டும். ஓசூர் மலை மீதுள்ள கழிப்பிட வசதியை மேம்படுத்த வேண்டும்.
ஆடு அடிக்கும் தொட்டிகள் புனரமைப்பு
ஆடு அடிக்கும் தொட்டிகளை புனரமைப்பு செய்து,
ஆண்டு குத்தகைக்கு விடவேண்டும். மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் ஒழிப்பு தீவிரம்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டும்.
போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.73.50 லட்சம் அபராதம் வசூல்
ஓசூர் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குப்பை கழிவுகளை கொட்டுதல், வீட்டு கழிவுகளை
கொட்டுதல், கொசுப்புழு உற்பத்தி, போதைப் பொருட்கள் விற்பனை, மாடுகளை சாலையில் திரிய விட்டவர்களுக்கு, அபராதம் என கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.73.50 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமைகளில்
அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்களில் மருத்துவர்கள்
பணியில் இருக்க நடவடிக்கை தேவை
ஓசூர் தொழிற்சாலை நகரம் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.
ரத்த வங்கிகளில் கூடுதல்
கட்டணங்கள் வசூல்
ஓசூரில் தனியார் ரத்த வங்கிகள் உரிய அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சில ரத்த வங்கிகள் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்கின்றன. ரத்த வங்கிகளின் தொடர்பு எண்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
12 தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் இருந்து பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள்
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கேட்டு கோரிக்கை விடுத்தனர். அவற்றை செய்து கொடுப்பதாக ஆணையாளர் ஸ்ரீகாந்த் உறுதி அளித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் லட்சுமி,
மோசின் தாஜ், ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.