“இந்த இந்தியா நான் கனவு கண்ட
இந்தியா அல்ல”
- மகாத்மா காந்தி
ஜனவரி 30-ம் தேதி
தியாகிகள் தினம் -
மகாத்மா காந்தியின்
நினைவு தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 30. –
இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், நாடு சுதந்திரம் பெற்றதில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மகத்தான பங்கையும், அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் விதமாகவும் அவர் மறைந்த நாளான ஜனவரி 30-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
காந்தி ஏன் கொல்லப்பட்டார்?
76 ஆண்டுகள் ஆகின்றன.
1948 ஜனவரி 30-ம் தேதி மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது
தேசப்பிதா மகாத்மா காந்தி
சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாதுராம் கோட்சே
ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது
அந்தச் செய்தி:
“காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள்,
காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”
இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறுவதற்கான வாய்ப்பு இருந்தது. இது நிகழாமல் போனதற்கு நேருவும், படேலும், மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும்.
அகிம்சை
அத்துடன் காந்தி அவர் உயிர் பிரியும்வரை உயிருக்கு உயிராக அடைகாத்து அவரது தொண்டர்கள் மத்தியில் வளர்த்து வந்த அகிம்சையை அவரை நேசித்த அனைவரும் அவருக்கு அஞ்சலியாக செலுத்தியதே அவ்வாறான பெருங்கலவரம் எதுவும் அன்றைய காலகட்டத்தில் ஏற்படாமல் இருந்ததற்கு காரணம் என்றும் நம்மால் உணர முடிகிறது.
இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார்.
முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார்.
“இந்த இந்தியா நான் கனவு கண்ட
இந்தியா அல்ல”
இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது.
இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!
----------------------------------------------------.