மனித கலாச்சாரம், பாரம்பரியம், கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல்மிகு கருவி தாய்மொழி.
தன்மானத்துடன் வாழ,
நாம் நம் தாய்மொழி காப்போம்.
பிப்ரவரி 21- உலகத் தாய்மொழி நாள்:
மொழி அழிந்தால் பண்பாடு அழியும்: அழியும் நிலையில் 43% மொழிகள்.
“தாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம்.”
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 21. –
1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2000 ஆம் ஆண்டு
முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி "பன்னாட்டுத் தாய்மொழி நாள்" ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகத் தாய்மொழி நாள் இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை நினைவுபடுத்துகிறது.
அதே நேரம், நாகரிக தாக்கத்தால் பழங்குடி மக்களின் பேச்சுமொழி உட்பட 43 சதவீதம் மொழிகள் அழியும் நிலையில் உள்ளன.
உலகம் முழுவதும்
உள்ள பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாது காக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், தாய் மொழியை சிறப்பாக பயில்வதுடன்,
தாய்மொழி வாயிலாகவே பிற மொழிகளையும் கற்கவேண்டும் என இந்த தினம் வலியுறுத்துகிறது.
உலகில்
எழுத்துக்களே இல்லாமல், பேச்சளவில் உள்ள மலை வாழ் மக்களின் மொழிகளும், அவர்களின் கலாச்சாரமும் அழிந்துவரும் அபாயத்தில் உள்ளன.
இதுகுறித்து, சூழல் கல்வியாளர் டேவிட்சன் சற்குணம் கூறியது: யுனெஸ்கோ நிறுவனம், மொழியால் எவ்வித பாகுபாடும் மனிதர்களிடம் இருக்கக்கூடாது என கூறுகிறது.
வளர்ந்து வரும் உலக மயமாக்கலின் செயல்பாடுகளால் மொழிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
பழங்கால மொழிகள் அழிவதால், உலகின் மிகச்சிறந்த மக்களின் பலவிதமான கலாச்சாரங்களும், தொன்றுதொட்டு பின் பற்றப்படும் வழக்கங்களும், சிந்தனை சக்திகளும் அழிந்து போகின்றன.
மனித கலாச்சாரம்,
பாரம்பரியம், கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல்மிகு கருவிகளாக தாய்மொழிகள் உள்ளன.
ஆனால், உலகில் பேசப்படும் சுமார் 6 ஆயிரம் மொழிகளில் 43 சதவீதம் மொழிகள் அழியும் நிலையில் உள்ளன.
40 சதவீதம் மக்களுக்கு பேசும் மொழிகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட வில்லை. மலைப் பகுதிகளில் வாழும் காணி, பணியர் உட்பட பழங்குடி மக்களின் பேச்சுவழக்கில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள்
இன்று எழுத்து வழக்கில் இல்லை.
இதனால், பழங்குடி மக்களின் மொழிகளை பாதுகாக்கும் வகையில்
2019-ம் ஆண்டை, `பழங்குடி மக்களின் பன்னாட்டு மொழிகளின் ஆண்டு’
என, ஐக்கிய நாடுகளின் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
பழங்குடி மக்களின் மொழிகளை பாதுகாத்து, அவற்றை ஆவணப் படுத்தும் முயற்சியில் யுனெஸ்கோ ஈடுபட்டுள்ளது என்றார்.
மதத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் அரசு, எந்த மதத்தைப் பின்பற்றுகிறதோ, அதே மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அந்த அரசால் எந்தத் துன்புறுத்தலும் நிகழாது என்று கூறுபவர்களுக்கு வரலாறு தரும் பதில்தான் பிப்ரவரி 21, உலகத் தாய்மொழி நாள்.
இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடு, தங்கள் தாய்மொழியில் கல்வி வேண்டும் என்று கேட்டதற்காக இஸ்லாம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிய நான்கு மாணவர்களைக் கொலை செய்தது.
அரசை விமர்சிப்பவர்கள் அதே மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அரசின் நியாயமற்ற செயலைக் கண்டித்ததால் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதுதான் வரலாறு.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு துன்பம் நிகழுமா? நிகழாதா? என்று கூற இயலாது. ஆனால் நியாயத்திற்காகப் போராடியவர்கள் வரலாறு நெடுகத் துன்பம் அனுபவித்ததைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த வரலாற்றை உணர்ந்துதான் இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற கோட்பாட்டை முன்வைக்கிறது.
அரசு அனைவரையும் சமமாகக் கருத வேண்டும். மதத்தை வைத்து மக்களைப் பாகுபடுத்தக் கூடாது.
தாய்மொழி காப்போம்
மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள்.
தன்மானத்துடன் வாழ, நாம் நம் தாய்மொழி காப்போம்.
தாய் மொழியே பயிற்று மொழி,
தாய் மொழியே ஆட்சி மொழி,
தாய்மொழியே நீதிமன்ற மொழி,
தாய்மொழியே வழிபாட்டு மொழி,
என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம்.
தமிழ் மொழிக்காக இன்னுயிர் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
----------------------------------------------.