தேர்தல் நடைமுறை விதிகளை
கடைபிடிக்க வேண்டும்
2026-ஆம் ஆண்டிற்கான
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தலுக்கான,
தேர்தல் பிரச்சாரக் காலம்
முடிவுற்ற பின்னர்
அரசியல் கட்சியினர் /
போட்டியிடும் வேட்பாளர்கள்
தேர்தல் நடைமுறை விதிகளை
கடைபிடிக்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 20. -
2026-ஆம் ஆண்டிற்கான
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தலுக்கான,
தேர்தல் பிரச்சாரக் காலம்
முடிவுற்ற பின்னர்
அரசியல் கட்சியினர் /
போட்டியிடும் வேட்பாளர்கள்
தேர்தல் நடைமுறை விதிகளை
கடைபிடிக்க வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126-இன் கீழ், 21.04.2026 அன்று மாலை 6.00 மணி முதல் (48 மணி நேரத்திற்கு முன்) வாக்குப் பதிவு நிறைவடையும் நேரம் வரை பின்வரும் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்பது இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
1. தேர்தல் தொடர்பாக எவரும் எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ கூட்டவோ, நடத்தவோ அல்லது அதில் கலந்துகொள்ளவோ கூடாது. தேர்தல் பிரசாரம் செய்யவோ கூடாது.
2. எவரும், திரைப்படம், தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற பிற சாதனங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு எவ்விதத் தேர்தல் சார்ந்த செய்தியையும் காட்சிப்படுத்தக் கூடாது. இது அனைத்து மின்னணு வடிவத் தகவல் தொடர்பு முறைகளையும் உள்ளடக்கியதாகும்.
3. எவரும், பொதுமக்களைத் தம்மிடம் ஈர்க்கும் நோக்குடன், இசை நிகழ்ச்சிகள், நாடக அரங்கேற்றங்கள் அல்லது பிற பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தாமே நடத்தியோ அல்லது பிறரைக்கொண்டு ஏற்பாடு செய்தோ, தேர்தல் சார்ந்த செய்திகள் எவற்றையும் பொதுமக்களிடையே பரப்பக் கூடாது. இப்பிரிவையும், மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு பிரிவுகளையும் மீறுவோர் மீது 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவ்விரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
4. தேர்தல் பிரச்சாரக் காலம் நிறைவடைந்த பிறகு, அந்த தொகுதிக்குள் தேர்தல் சார்ந்த செயல்பாடுகள் ஏதும் நடைபெறக் கூடாது. அத்தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்டவரும், அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதவருமான அரசியல் நிர்வாகிகள். கட்சித் தொண்டர்கள், ஊர்வலப் பொறுப்பாளர்கள், பிரச்சாரப் பணியாளர்கள் போன்றோர் அத்தொகுதிக்குள் தொடர்ந்து தங்கியிருக்கக் கூடாது. ஏனெனில், பிரச்சாரக் காலம் முடிந்த பிறகும் இவர்கள் தொடர்ந்து அங்கு தங்கியிருப்பது. சுதந்திரமான மற்று நியாயமான தேர்தலுக்குத் தேவையான சூழலைச் சீர்குலைக்கக்கூடும்.
(I) தேர்தல் பிரச்சாரக் காலம் நிறைவடைந்த உடனேயே, அத்தகைய நிர்வாகிகள் அனைவரும் அத்தொகுதியை விட்டு வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள். வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் ஆகியோர் இவ்விதியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
(i) மேற்கண்ட அறிவுறுத்தல் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு. மாவட்ட தேர்தல் நிர்வாகமும் / காவல்துறையும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களை ஆய்வு செய்து, வெளியாட்கள் மற்றும் அத்தகைய நபர்கள் எவரேனும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிதல். தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களை ஆய்வு செய்து, அங்கு தங்கியுள்ளோரின் பட்டியலைத் தொடர்ந்து கண்காணித்தல்.
தொகுதியின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தல்.
தொகுதிக்குட்பட்ட தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் முதலானவற்றில், அங்குள்ள நபர்கள் அல்லது குழுவினரின் அடையாளத்தை சரிபார்த்து, அவர்கள் அத்தொகுதியின் வாக்காளர்களா இல்லையா என்பதை உறுதி செய்தல்
5. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள், 21.04.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் செல்லாதவையாகிவிடும். அதற்குப் பின் அவ்வாகனங்கள் தொகுதிக்குள் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.
6. மாநில சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் பின்வரும் வாகனங்களைப் பயன்படுத்த உரிமை பெற்றுள்ளார்.
வேட்பாளர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம். அந்த சட்டமன்றத் தொகுதிக்குரிய தனது தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம். தனது தேர்தல் முகவர் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் மேற்கூறிய வாகனங்களுக்கான அனுமதிகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும்.
7. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்ப அழைத்து வரவோ. வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ எந்தவொரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தவோ, பெறவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். இது, 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். 1951-இன் பிரிவு 133-இன் கீழ் தண்டனைக்குரிய ஒரு 'ஊழல் நடைமுறை' (corrupt practice) ஆகும்.
8. வேட்பாளர்களின் தேர்தல் முகாம் (Election booth) அமைப்பதற்கு, வாக்குச்சாவடியிலிருந்து குறைந்தது 100 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும். அந்த முகாமில் இரண்டு நபர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்; மேலும், அவர்கள் அங்கு தேவையற்ற கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது. இத்தகைய முகாம் முற்றிலும் தற்காலிகமாகவே இருக்க வேண்டும்.
9. அத்தகைய முகாம்களில் பணியில் இருப்பவர்கள், அதே வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும்: மேலும், சரிபார்ப்பிற்காக அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை (EPIC) வைத்திருக்க வேண்டும். குற்றப் பின்னணி கொண்ட நபர்கள், வாக்குப்பதிவு நாளன்று அரசியல் கட்சிகளின் முகாம்களில் பணியில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
10.2026-ஆம் ஆண்டு. ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, மேற்படி அறிவுறுத்தல்களை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது.
11. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து தொகுதி வேட்பாளர்களும்
மேலே கூறப்பட்ட நிபந்தனைகளை
தவறாது பின்பற்றி
நேர்மையான வெளிப்படையான
தேர்தல் நடைபெறுவதற்கு
தங்களது முழுமையான
ஒத்துழைப்பை நல்குமாறு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------.