தளி ஊராட்சி ஒன்றியம்,
கொடக்கரை கிராமத்தில் வசிக்கும்
மலைவாழ் மக்களின் கோரிக்கைகளான
அரசு மினி பேருந்து வசதி மற்றும்
தையல் இயந்திரங்கள்,
குடிநீர், மின்சாரம் மற்றும்
சாலை வசதிகள் விரைவில் வழங்கிட
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தேன்கனிக்கோட்டை வட்டம்,
பெட்டமுகிலாளம் ஊராட்சி,
சித்தாபுரம் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி வளாகத்தில்,
பெட்டமுகிலாளம்,
இரத்தினகிரி மற்றும்
இருதுகோட்டை மலைவாழ்
கிராமங்களில் உள்ள
பள்ளிகளில் பயிலும்
153 பள்ளி மாணவர்களுக்கு
பிறப்பு சான்றிதழை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (21.07.2026) வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தேன்கனிக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பெட்டமுகிலாளம், இரத்தினகிரி மற்றும் இருதுகோட்டை மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 153 பள்ளி மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ரூ.46 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேப்போல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பெட்ட முகிலாளம் சாலைப்பணிகள் 10 நாட்களில் தொடங்கப்படும். மேலூர் தொலுவபெட்டா, மேலூர் உல்லட்டி சாலைக்கு தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெட்டமுகிலாளம், ஒகேனக்கல் முதல் அஞ்செட்டி, கெம்பக்கரை, மேலூர் தொலுவபெட்டா ஆகிய 4 சாலைகளுக்கு பணிகள் மேற்கொள்ள தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் 10 நாட்களில் தொடங்கப்பட்டு விரைவில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
அதேபோல் வன உரிமை பொறுத்தமட்டில்,
3500 நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதால், வன உரிமை குறித்த பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
மாணவர்கள் எக்காரணத்திற்காகவும் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது. கல்வி பயில பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி பயிலலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ம்வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
எனவே மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி நல்லமுறையில் கல்வி கற்று உயர் பதவிக்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள், பெட்டமுகிலாளம் ஊராட்சி,
சித்திக் நகரில் வசிக்கும்
65 இருளர் இன குடியிருப்பு மற்றும்
தாசரகொல்லை பகுதியில் வசிக்கும்
48 இருளர் இன குடியிருப்புகளுக்கு
தேவையான குடிநீர் வழங்க
போர்க்கால அடிப்படையில்,
இங்குள்ள திறந்தவெளிக் கிணறை
14 -வது சேமிப்பு நிதியிலிருந்து
5லட்சம் மதிப்பில் தூர்வாரி, புதிய மின்மோட்டார்கள் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, தளி ஊராட்சி ஒன்றியம், தொட்டமஞ்சி ஊராட்சி, கொடக்கரை கிராமத்தில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியின நல மக்கள் 102 நபர்களுக்கு தாட்கோ சார்பாக, தலா ரூ.5,73,000 வீதம் மொத்தம் ரூ.5 கோடியே 84 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு அதற்கான சாவி உரியவர்களிடம் வழங்கப்பட்டதையடுத்து, இக்குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு, மலைவாழ் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இம்மலைவாழ் மக்கள் தங்களுக்கு கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டமைக்கு, வீட்டிற்கு அருகிலேயே கழிப்பறை கட்டப்பட்டு, கழிவுநீர் உறிஞ்சி குழிகள் அமைக்கப்படும் எனவும், மேலும், பேருந்து வசதி, தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் கோரி கோரிக்கை வைத்தமைக்கு, விரைவில் அரசு மினி பேருந்து இயக்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேப்போல் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், வீட்டுமனை பட்டா இல்லாதவர்கள் பட்டா கோரி மனு அளித்ததையடுத்து, இப்பகுதி வனப்பகுதியாக உள்ளதால், இவ்விடத்திற்கு பதிலாக இப்பகுதிக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சாத்தியக் கூறுகள் கண்டறிந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்து, கொடக்கரை அரசு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் பாடத்திட்டங்களின் விவரம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், இப்பள்ளியில் புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்து மாணவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கை கழுவுவதற்காக கூடுதலாக 4 அல்லது 5 டேப்கள் போட உத்தரவிட்டார்.
மேலும், இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, தளி அரசு கலைக்கல்லூரி அருகில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது,
ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.உமா மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.மோகன சுந்தரம், தாட்கோ செயற்பொறியாளர் திரு.சுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.தமிழ்செல்வன், உதவி பொறியாளர் திருமதி.தமிழ், வட்டாட்சியர்கள் திரு.வேலு (தேன்கனிக்கோட்டை), திரு.பாலாஜி (அஞ்செட்டி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.விஜயா, திருமதி.லட்சுமி, திரு.ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ், தாட்கோ திட்ட மேற்பார்வையாளர் திரு.ஏழுமலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
----------------------------------------------------------.