ஒசூரில் ஹோஸ்மியா -
15-ம் ஆண்டு குடும்ப விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
ஹோஸ்மியா அமைப்பின்
15-ம் ஆண்டு குடும்ப விழா
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
450-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற
தொழில் முனைவோர்களின் பிள்ளைகளுக்குப்
பரிசுகள் வழங்கி பாராட்டு
தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்
நிறுவனங்களின் சங்க (டான்ஸ்ட்டியா)
மாநிலத்தலைவர்
திரு. வாசுதேவன்,
அவர்கள் பங்கேற்பு.
சிறு, குறு தொழில்களின்
கோரிக்கைகளை முதலமைச்சரிடம்
நேரில் வலியுறுத்தியதாக -
“டான்ஸ்ட்டியா”
மாநிலத் தலைவர் பேட்டி.
ஒசூர். மே. 24. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
ஓசூர் மைக்ரோ இண்டஸ்ட்ரியல்
அசோசியேஷன் எனப்படும்
'ஹோஸ்மியா' அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த அமைப்பின்
15-ம் ஆண்டு குடும்ப விழா
மே 24-ம் தேதியன்று
வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் சங்க
(டான்ஸ்ட்டியா) மாநிலத் தலைவர்
திரு. வாசுதேவன் அவர்கள்...
தமிழக சிறு, குறு தொழில்கள் சந்தித்து வரும்
பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், முதலமைச்சரிடம் தங்களின் கோரிக்கைகளை நேரில் சமர்ப்பித்தது குறித்தும்
விரிவான பேட்டி அளித்தார்.
ஹோஸ்மியா
15-ம் ஆண்டு குடும்ப விழா
ஓசூர் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெற்ற ஹோஸ்மியா 15-ம் ஆண்டு
குடும்ப விழாவுக்கு
ஹோஸ்மியா அமைப்பின் தலைவர்
திரு. முருகேசன்
அவர்கள் தலைமை வகித்தார்.
இந்த விழாவில்
சிறப்பு அழைப்பாளர்களாக
டான்ஸ்ட்டியா அமைப்பின்
மாநிலத் தலைவர்
திரு. வாசுதேவன்,
பொதுச் செயலாளர்
திரு. நித்தியானந்தம்,
துணைத் தலைவர்
திரு. சுப்பிரமணியன்,
உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார்கள்.
விழாவில்,
பிரபல பட்டிமன்ற பேச்சாளர்
திருமதி கவிதா ஜவகர்,
'ஆனந்தம் விளையாடும் வீடு'
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பரிசுகள் வழங்கி பாராட்டு
இந்த விழாவில்
அண்மையில் நடைபெற்ற
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
450-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற
தொழில் முனைவோர்களின்
பிள்ளைகளுக்குப் பரிசுகள் வழங்கி
பாராட்டி கவுரவித்தனர்.
கலைநிகழ்ச்சிகள்
தொழிலாளர்களின் குழந்தைகளின்
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் குடும்பத்தினர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.
டான்ஸ்ட்டியா மாநிலத் தலைவர்
திரு. வாசுதேவன்.
அவர்கள் செய்தியாளர்களுக்கு
அளித்த பேட்டியில் கூறியதாவது,
தாய் சங்கம்
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்
(டான்ஸ்ட்டியா) கடந்த 1956 முதல்
சுமார் 75 வருடங்களாக குறுந்தொழில்களின்
முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும்
ஒரு தாய் சங்கமாகும்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள
தமிழக முதலமைச்சருக்கு
எங்களது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த வாரம் எங்களது கோரிக்கையை ஏற்று, பெரிய நிறுவனங்களுக்கு இணையாக எங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினார்.
அதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
கடந்த 7-ஆம் தேதி அவரைச் சந்தித்து,
தமிழக சிறு, குறு தொழில்கள் சந்தித்து வரும் முக்கியப் பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக அளித்துள்ளோம்.
தமிழகத்தில் உள்ள
40 லட்சம் சிறு, குறு நிறுவனங்களில்
97 சதவீதம் பேர் குறுந்தொழில்
(Micro Industries) புரிபவர்களே.
இவர்கள் அனைவரும் தாழ்வழுத்த (LT) மின்சாரத்தையே பயன்படுத்துகின்றனர்.
கடந்த 2021-ல் கிலோவாட்டுக்கு
35 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம்,
தற்போது 165 ரூபாயாக (சுமார் 400 சதவீதம்) உயர்த்தப்பட்டுள்ளது
பெரும் சுமையாக உள்ளது.
இதனால் பெரும்பாலான தொழில்கள்
நஷ்டத்தில் இயங்குகின்றன.
கடந்த 3, 4 ஆண்டுகளில் சொத்துவரி
300 சதவீதம் வரை
எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,
தொழிலக பாதுகாப்பு மற்றும்
சுகாதார இயக்ககம் (DISH) போன்ற
துறைகள் தனித்தனி இணையதளங்களை வைத்துள்ளதால்
ஒற்றைச் சாளர முறை செயலிழந்துள்ளது.
இதனை மாற்றி, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்காவிட்டால்
'தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்'
(Deemed to be approved)
பழைய நடைமுறையைக்
கொண்டு வர வேண்டும்.
ஓசூரில் 3,000-க்கும் மேற்பட்ட
குறுந்தொழில்கள் உள்ளதால்,
மேலும் ஒரு புதிய சிட்கோ தொழிற்பேட்டையை
150 முதல் 200 ஏக்கரில் அமைக்க வேண்டும்.
இதற்கான ஆய்வுகள் தற்போது
சிட்கோ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிட்கோ தொழிற்பேட்டைகளில்
சாலை, விளக்கு, வடிகால் போன்ற பராமரிப்புப் பணிகளை சிட்கோவே செய்வதால்
அதற்குக் கட்டணம் செலுத்துகிறோம்.
ஆனால், எவ்விதச் சேவையும் செய்யாத
உள்ளாட்சி அமைப்புகளும் அபரிமிதமான சொத்துவரி வசூலிப்பதால் ஏற்படும்
இந்த இரட்டை வரி விதிப்பை
ஒழிக்க வேண்டும்.
தனியார் நிலங்களில்
தொழில் தொடங்க நில வகைப்பாட்டை
(Land Classification) எளிதாக
மாற்றித் தர வேண்டும்.
மேலும், தொழிற்சாலைகளில்
பொருத்தப்படும் சோலார் கட்டமைப்புகளை 'இயந்திரங்களாகக்' (Machinery) கருதி,
அதற்கு 25 முதல் 30 சதவீதம் வரை
மூலதன மானியம் வழங்க வேண்டும்.
ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட
சென்னை - பெங்களூர்,
சென்னை - கன்னியாகுமரி
தொழில் வழித்தடங்களை விரைந்து
செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில்
ஓசூர்,
திருச்சி,
சென்னை,
உள்ளிட்ட 5 இடங்களில்
அறிவிக்கப்பட்ட
ராணுவப் பாதுகாப்பு வழித்தட
(Defense Corridor) திட்டத்தை
உடனே தொடங்க வேண்டும்.
உள்கட்டமைப்பு வசதிகள் குறைவால்
இங்கிருந்த பெரிய தொழிற்சாலை
அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு
(திருப்பதி) சென்றுள்ளது.
எனவே, தொழில்களைத் தக்கவைக்க உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
மத்திய அரசு
பொதுத்துறை நிறுவனங்களில்
25% சிறு தொழில்களிடம் கொள்முதல்
செய்வதைப் போல,
தமிழகத்திலும் உள்ள பெரிய நிறுவனங்கள்
தங்களுக்குத் தேவையான பொருட்களை
இங்கேயுள்ள சிறு, குறு
நிறுவனங்களிடமிருந்தே
கொள்முதல் செய்ய வேண்டும்
என்ற கொள்கை முடிவை
தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இந்த நியாயமான
கோரிக்கைகளைக் கேட்டறிந்த
முதலமைச்சர், அவர்கள்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக
உறுதி அளித்துள்ளதாக
டான்ஸ்ட்டியா தலைவர் மற்றும்
நிர்வாகிகள் தெரிவித்தனர்.
------------------------------------------.