கெலவரப்பள்ளி அணையில்
நுரைபொங்குதல் மற்றும்
பாசி வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களிடம் சமர்பித்து,
கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி
தீர்வு காணப்படும் என
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்
காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
டாக்டர்.வே.க.ராஜீவ்
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுலை. 07. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்,
ஜூஜூவாடி சிப்காட் திட்ட அலுவலகம்,
கிருஷ்ணகிரி அணை மற்றும்
கிருஷ்ணகிரி நகராட்சி பாதாள சாக்கடை
திட்ட பணிகள் ஆகியவற்றை
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்
காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
டாக்டர்.வே.க.ராஜீவ்
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.பா.பாலகிருஷ்ணா ரெட்டி
(ஓசூர்),
திரு.பா.முகுந்தன்
(கிருஷ்ணகிரி),
திரு.ந.இளையராஜா
(ஊத்தங்கரை),
ஒசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம்
இ.ஆ.ப.,
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
இணை தலைமை சுற்றுச்சூழல்
பொறியாளர் (க) (வேலூர்)
திரு.இரா.வெங்கடேசன்
ஆகியோர் முன்னிலையில் இன்று (07.07.2026)
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும்
காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
டாக்டர்.வே.க.ராஜீவ்
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தென்பெண்ணை கரையோர விவசாய பெருங்குடி மக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இன்று ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம் கர்நாடக எல்லையிலிருந்து சுமார் 8 கி.மீ. மற்றும் ஒசூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் நுழைந்த பின்பு ஆற்றின் முதல் முக்கிய நீர்த்தேக்கமாக இது விளங்குகிறது.
இதன் கால்வாய் அமைப்பு மூலம் சுமார் 3,676 ஹெக்டேர் பாசனப் பரப்பிற்கு நீர் வழங்கப்படுகிறது. மேலும் SIPCOT ஓசூர் குடிநீர் திட்டத்திற்கும், ஒசூர் நகராட்சி குடிநீர் விநியோகத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது.
கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர் சுமார் 60 கி.மீ. கீழே பாய்ந்து கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் (KRP) அணையை அடைகிறது.
தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் மற்றும் வர்த்தூர் ஏரிகளின் உபரி நீர் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இது கோரமங்கலா, சல்லகட்டா மற்றும் ஹெப்பால் பள்ளத்தாக்குகளிலிருந்து வரும் வீட்டு கழிவுநீரை ஏந்தி வருகிறது.
கர்நாடக - தமிழ்நாடு எல்லை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் மீண்டும் மீண்டும் காணப்படும் நுரை மற்றும் மாசு சுமைக்கு இது முக்கிய காரணமாகும்.
பெங்களூரு மாநகரில் உருவாகும் சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், பெல்லந்தூர், அகாரா மற்றும் வர்தூர் ஏரிகள் உள்ளிட்ட ஒன்றோடொன்று இணைந்துள்ள ஏரி அமைப்புகள் வழியாக தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.
இந்த கழிவுநீரே கெலவரப்பள்ளி அணையை அடைவதால், அணை நீரில் நுரை பொங்குதல் மற்றும் மாசுபாடு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த ஆற்றின் கர்நாடக எல்லைப்பகுதி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB) அதிக உயிர்வேதியியல் (BOD) . Priority-I Polluted River Stretch வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் காலங்களில், கெலவரப்பள்ளி அணைக்கு அதிகளவு நீர்வரத்து ஏற்படும்போது அணையின் உபரிநீர் வெளியேற்றப்படும் இடத்தில் அதிக வேகத்தில் நீர் விழுவதால், கழிவுநீரில் உள்ள சர்பாக்டன்ட்கள் (Surface Active Agents), பாஸ்பேட் மற்றும் பிற கரிம மாசுக்கள் காரணமாக அதிகளவில் நுரை உருவாகும்.
இது அணையின் முழுப் பகுதியிலும் அல்லாமல், முக்கியமாக உபரிநீர் வெளியேறும் பகுதியில் மட்டுமே அதிகமாகக் காணப்படுகிறது.
பின்னர் நீர் கீழ்நோக்கிப் பாயும்போது இயற்கையான நீர்த்தல், காற்றோட்டம் மற்றும் உயிரியல் சிதைவு காரணமாக நுரை படிப்படியாகக் குறைகிறது.
இது தொடர்பாக, மாண்புமிகு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT-Southern Zone) 2020 ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, கூட்டு ஆய்வுக்குழுவை அமைத்தது.
அந்தக் குழு நடத்திய ஆய்வில், பெங்களூரு நகரிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரே கெலவரப்பள்ளி அணையில் தொடர்ந்து ஏற்படும் மாசுபாடு மற்றும் நுரை பிரச்சினைக்கு முக்கிய காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரச்சினையைத் தீர்க்க தேவையான பெரும்பாலான நடவடிக்கைகள் கர்நாடக அரசும், அங்குள்ள அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டியவை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.
கர்நாடக அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் நாளொன்றுக்கு சுமார் 1329 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. தற்போது 26 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) மூலம் சுமார் 830 MLD மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.
மீதமுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக கூடுதலாக 12 புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
தொடர்ந்து கர்நாடக எல்லைப்பகுதியான சொக்கரசன்பள்ளியில் மாதந்தோறும் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.
மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை கடிதம் எழுதி, கர்நாடக அரசின் மூலம் கழிவுநீர் கலப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.
கெலவரப்பள்ளி (Real Time Water Quality Monitoring Station) நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அதிகளவு BOD, COD, அம்மோனிக், நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் மிக அதிக அளவிலான மொத்த மற்றும் மலக்கழிவு கோலிஃபார்ம் கிருமிகள் பதிவாகியுள்ளன.
இவை அனைத்தும், கர்நாடக மாநிலத்திலிருந்து தொடர்ந்து கழிவுநீர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து கீழ்நோக்கி வரும் நீர் கிருஷ்ணகிரி அணையை அடையும் போது, நுரை உருவாக்கும் தன்மை பெருமளவில் குறைந்தாலும் நீரில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் (Nutrients) காரணமாக பாசி மற்றும் Water Hyacinth அதிகமாக வளர்கின்றன.
இதனால் கிருஷ்ணகிரி அணை நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இது நீரில் ஏற்பட்டுள்ள Eutrophication எனப்படும் ஊட்டச்சத்து அதிகரிப்பு காரணமாகும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளில் நீர்தர ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கிருஷ்ணகிரி அணையில் வளர்ந்துள்ள Water Hyacinth செடிகளை உடனடியாக அகற்றுதல், தொடர்ந்து களைகள் அகற்றுதல், உள்ளூர் கழிவுநீர் கலப்புகளைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வு அறிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்பித்து, கர்நாடக அரசு மற்றும் பசுமை தீர்ப்பாயத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர்.வே.க.ராஜீவ் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாகலூர் ஊராட்சியில், கர்நாடக மாநிலத்திலிருந்து பாகலூர் நுழைவு வாயில் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரை பார்வையிட்டார். தொடர்ந்து, ஒசூர் மாநகராட்சி, ஜூஜூவாடி சிப்காட் திட்ட அலுவலகத்தில் தொழில்துறை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குருபரப்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான மைலான் நிறுவனத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திடீர் ஆய்வு செய்து, இந்நிறுவனத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்து, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஏரியில் உள்ள நீரின் தரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடாந்து, காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், சப்பானிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மாங்கூழ் உற்பத்தி நிலையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மா கழிவுகள் மற்றும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க சுற்றுசூழல் தொடர்ந்து, கிருஷ்ணகிரி அணையில், அணைக்கு வரும் நீரின் தரம் மற்றும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் தரம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி, பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், 9 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், சிப்பம்-1 ல் கழிவுநீர் சேகரித்தல், தலைமை கழிவு நீரேற்று நிலையம் உள்ளிட்ட பணிகளும், சிப்பம்-2 ல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு ஆய்வகத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தரத்தை பரிசோதனை செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது,
உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.சாய்சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.ஷாஜகான், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.வி.புருஷோத்தமன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் திரு.சேகர், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.த.செந்தில்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.செந்தில் குமார், சிப்காட் திட்ட அலுவலர்கள் திரு.ராஜ்குமார், திருமதி.சிந்து, திருமதி.சிவசங்கரி, வட்டாட்சியர்கள் திரு.ஜெகதீஸ்குமார் (ஓசூர்), திருமதி.ராஜலட்சுமி (கிருஷ்ணகிரி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
-----------------------------------------.