வடகிழக்கு பருவமழை காலத்தில்
தோட்டக்கலைப் பயிர்களை
பாதுகாத்துக்கொள்ள
மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. அக். 22. –
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
விவசாயிகள்
வடகிழக்கு பருவமழை காலத்தில்
கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை மேற்கொண்டு
தங்களது தோட்டக்கலைப் பயிர்களை
பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்ட
விவசாயிகள் எதிர்வரும்
வடகிழக்கு பருவமழை காலத்தில்
தோட்டக்கலைப் பயிர்களை
பாதுகாக்கும் பொருட்டு கீழ்க்காணும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
தவறாது கடைப்பிடித்திட
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பசுமைக்குடில்கள்-
1) பசுமைக்குடில் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும்.
2) பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் பக்கவாட்டு திரைகளை உரிய முறையில் மூடி வெளிக்காற்று உள்பகுதியில் புகாமல் பாதுகாக்க வேண்டும்.
3) அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
4) பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் ஏதேனும் கிழிந்த நெகிழி சீட்டுகள் இருப்பின் அவற்றை மாற்றி உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
நிழல்வலைக்குடில்கள் :-
1) கிழிந்து போன நிழல்வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும்.
2) நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்-
1) அறுவடைக்கு தயாராக இருக்கும் பழத் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைக்கலாம்.
2) வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்க்கலாம்.
3) கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்த பின் நடவு/விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
4) காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கலாம்.
5) மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.
6) மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்கலாம். மேலும் இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவர்த்தி செய்யலாம்.
மா/கொய்யா/எலுமிச்சை/பலா:-
1) காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
2) மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண் குவித்து வைத்தல் வேண்டும்.
3) தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும்.
4) நோய்த்தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்
5) இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொணடு கட்ட வேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும்.
வாழை:-
1) காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும்.
சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்தி முட்டு கொடுக்க வேண்டும்.
2) மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடிவைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
தென்னை:-
1) தென்னை மரங்களில் தென்னங் குலைகளை பருவ மழைக்கு முன்னரே அறுவடை செய்திட வேண்டும்.
மேலும் காய்ந்த மற்றும் பழைய தென்னை ஒலைகளையும் அகற்றிட வேண்டும்.
மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி மழைநீர் தேங்காத படி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள்:-
1) தோட்டக்கலைப் பயிர்களான
வாழை,
மரவள்ளி,
வெங்காயம்,
மிளகாய்,
தக்காளி,
வெண்டை,
கொத்தமல்லி,
கத்திரி,
முட்டைகோஸ்,
பூண்டு,
இஞ்சி,
உருளைகிழங்கு,
மஞ்சள்
மற்றும்
கேரட்
போன்ற பயிர்களுக்கு பொதுவாக
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை
பின்பற்ற வேண்டும்.
2) அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
3) காற்றினால் ஏற்படும் சேதராரத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்கவும்.
மேலும்,
மின்கம்பம் அருகில் நிற்க கூடாது.
கால்நடைகளை மின்கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கட்டக் கூடாது.
அதற்கு தகுந்த இடங்களில் கட்ட வேண்டும்.
கரைகள் உடையும் தருவாயில் உள்ள ஏரி, கம்மாய்களை கண்டறியப்பட்டால்...
உடன் மாவட்ட நிருவாகத்திற்கு
தகவல் தெரிவிக்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------.